TVK Vijay: “ஆட்சி, அதிகாரத்தில் பங்கு..” கூட்டணிக்கு சிக்னல் கொடுத்த விஜய்... திமுகவுக்கு சிக்கல்?
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகளுக்கு, தேர்தலில் வெற்றிப் பெற்றால் ஆட்சி, அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என விஜய் கூறியிருந்தார். இதனால் திமுக கூட்டணியில் விரிசல் வரலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நேற்று நடைபெற்று முடிந்தது. மதியம் 3 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந்த மாநாடு, இரவு 7 மணிக்குள் முடிவுக்கு வந்தது. தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் ஆரம்பம் முதலே ஆவேசமாக பேசத் தொடங்கிய விஜய், கூட்டணி பற்றியும் வெளிப்படையாக அறிவித்தார். அதன்படி, அரசியல் பயணத்தில் நம்மை நம்பி வருபவர்களையும் நாம் அன்போடு வரவேற்க வேண்டும். அப்படி வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் சமமான அதிகாரப் பங்கு கொடுக்கப்படும் என்றார்.
அதேநேரம், மாநில ஆளுங்கட்சியான திமுக, மத்தியில் ஆட்சி செய்துவரும் பாஜக உட்பட மேலும் சில கட்சிகளையும் விஜய் சரமாரியாக தாக்கிப் பேசினார். திராவிட மாடல் ஆட்சி என மக்களை ஏமாற்றுவதாக திமுகவையும், பாஜகவின் பிளவுவாத அரசியலையும் கடுமையாக சாடியிருந்தார். முக்கியமாக கூட்டணி குறித்து விஜய் பேசியது தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் விசிக தலைவர் திருமாவளவன் பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலானது. அதில், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதே விசிகவின் நிலைப்பாடு என்பதாக பேசியிருந்தார்.
திமுக கூட்டணியில் விசிக இருக்கும் போது, ஆட்சி, அதிகாரம் குறித்து திருமாவளவன் பேசிய வீடியோ திடீரென ட்ரெண்டானது சலசலப்பை ஏற்படுத்தியது. உடனடியாக அந்த வீடியோ நீக்கப்பட்டாலும் விசிகவின் நிலைப்பாடு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தான் என திருமாவளன் மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தார். அதேநேரம் தொடர்ந்து திமுக கூட்டணியில் விசிக இருக்கும் என்றும், அதில் எந்த சிக்கலும் இல்லை எனவும் தெரிவித்திருந்தார். இன்னொரு பக்கம் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடுக்கும் வாழ்த்துக் கூறியிருந்தார் திருமாவளவன். அதேபோல், தவெக கொள்கை வழிகாட்டியாக அண்ணல் அம்பேத்கரையும் விஜய் அறிவித்துள்ளது விசிகவினர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், தான் நேற்று மாநாட்டில் கூட்டணி வைக்கும் கட்சியினருக்கு, ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொடுக்கப்படும் என விஜய் வெளிப்படையாக அறிவித்தார். இதற்கு உடனடியாக ரியாக்ட் செய்துள்ள விசிக துணைப் பொதுச்செயலாளார் ஆதவ் அர்ஜுனா, “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்கால தமிழ்நாடு அரசியல் களம் அந்த கருத்தை முன்வைத்தே பயணப்படும் நிலைக்கு வந்துள்ளது. அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதைத் தனது முதல் மாநாட்டு உரையில் உணர்ந்து பேசியிருக்கிறார் சகோதரர் விஜய். அவருக்கு வாழ்த்துகள். ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற அரசியலை முன்னெடுக்க, அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதே இனி எதிர்காலத்தின் அரசியல் கருத்தியல். தமிழ்நாடு அரசியல் களம் புதிய பாதையை நோக்கிப் பயணப்படும்” என ட்வீட் செய்திருந்தார்.
அதேபோல், “மதச்சார்பின்மை தான் கொள்கை என்று அறிவித்திருக்கும் விஜய், இந்து மத குறியீடாக பகவத் கீதை, இஸ்லாம் மத குறியீடாகக் குர்ஆன், கிறிஸ்தவ மத குறியீடாக பைபிளை பெற்றுள்ளார்; விஜய் பகவத் கீதையைப் படிப்பதோடு, அதைப்பற்றி அம்பேத்கர் எழுதியிருப்பதையும் படிக்க வேண்டும்; இல்லாவிட்டால் அம்பேத்கரை சாரமற்ற வெற்றுக் குறியீடாகப் பயன்படுத்துவதில் போய் அது முடிந்துவிடும்” என விசிக எம்பி ரவிக்குமார் அட்வைஸ் செய்துள்ளார். தற்போதைய நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு விசிகவினரின் சப்போர்ட் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. திமுக கூட்டணியில் இருந்துகொண்டே விஜய்யின் கருத்துகளுக்கு விசிகவினர் ஆதரவு தெரிவிப்பது, 2026 தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும், விஜய்யின் அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். “கடந்த 75 வருடங்களில் தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு எனும் கூட்டணி ஆட்சி குறித்து வெளிப்படையாக பேசவும் இல்லை; பல சூழல்கள் ஏற்பட்ட போதும் ஆட்சியில் எந்த கட்சிக்கும் பங்கு அளிக்கவுமில்லை. ஆனால், விஜய் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி முழக்கத்தை முன் வைத்துள்ளார்” என பாராட்டியுள்ளார்.
அதேநேரம், மாநாட்டுக்கு முன்பு வரை விஜய்யை தனது தம்பி என உரிமையோடு கொண்டாடிய சீமான், தற்போது தவெக கொள்கை தங்களுக்கு ஒத்துவராது என அதிரடியாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழக வெற்றிக் கழகத்துடன் நாம் தமிழர் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்பதையும் தெரிவித்துவிட்டார். இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், 2026 தேர்தலில் திமுக கூட்டணியில் கண்டிப்பாக மாற்றங்கள் இருக்கும் எனக் கூறுகின்றனர். ஆட்சி, அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என விஜய் அறிவித்துள்ளது, விசிக உட்பட திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கான சிக்னல். எனவே 2026 தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?