அரசியல்

தவெகவின் நிலைப்பாடே அல்ல.. விஷமக் கருத்துகளைத் திணிக்கும் அரசியல் கட்சிகள்.. என். ஆனந்த் அதிரடி

தவெக தலைமை நிலையச் செயலகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாதவர்கள் தெரிவிக்கும் கருத்துகள், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வக் கருத்தோ அல்லது நிலைப்பாடோ அல்ல என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தவெகவின் நிலைப்பாடே அல்ல.. விஷமக் கருத்துகளைத் திணிக்கும் அரசியல் கட்சிகள்.. என். ஆனந்த் அதிரடி
விஜய்-என்.ஆனந்த்

நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார். இவர் மக்கள் சார்ந்த பிரச்சனைகள் தொடர்பாகவும், ஆளும் கட்சி மீதான விமர்சனத்தையும்  தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவாகவும், சில நேரங்களில் அறிக்கை வயிலாகவும் தெரிவித்து வருகிறார். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆளுநரை நேரில் சந்தித்து விஜய் மனு அளித்தார். 

தொடர்ந்து, பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை சந்தித்து உரையாற்றினார். இதையடுத்து, கடந்த 2-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து  பனையூர் கட்சி அலுவலகத்தில் கொள்கைத் தலைவர்களின் சிலைகளை நிறுவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இவ்வாறு 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், சில அரசியல் கட்சிகள் திட்டமிட்ட சில விஷமக் கருத்துக்களை திணிக்கும் பணியைச் செய்து வருவதாக தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தொலைக்காட்சி, செய்தி ஊடகங்களில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தலைவர் அவர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கொள்கை பரப்பு மற்றும் செய்தித் தொடர்பு நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகள் மட்டுமே கழகத்தின் கருத்து மற்றும் நிலைப்பாடாகும்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரைக் கழகத் தலைவர் அறிவித்து, கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை, மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்று மற்றும் ஊக்கத் தொகை வழங்கியது, வெற்றிக் கொள்கைத் திருவிழா, கழக ஆண்டு விழா எனத் தமிழக வெற்றிக் கழகம் வீறுநடை போட்டு, மக்களின் பேராதரவுடன் மிகப் பெரிய அளவில் வளர்ந்து வருகிறது.

இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சில அரசியல் கட்சிகள், தங்கள் ஆதரவாளர்களை, பத்திரிகையாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்களாகச் சித்திரித்து ஊடக விவாதங்களில் பங்கேற்கச் செய்து, திட்டமிட்ட சில விஷமக் கருத்துகளைத் திணிக்கும் பணியைச் செய்து வருகின்றன. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஊடக விவாதங்களில் பங்கேற்பதற்காக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அல்லது அவரின் ஒப்புதலோடு தலைமை நிலையச் செயலகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாதவர்கள், ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு தெரிவிக்கும் கருத்துகள், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வக் கருத்தோ அல்லது நிலைப்பாடோ அல்ல என்பதைக் கழகத் தலைவர் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே அதிகாரப்பூர்வமற்றவர்கள் கழகத்தின் பெயரைப் பயன்படுத்தி, ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு தெரிவிக்கும் கருத்து மற்றும் நிலைப்பாடுகளைத் தமிழக மக்களும், கழகத் தோழர்களும் நம்பவோ, ஏற்றுக்கொள்ளவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.