தமிழ்நாடு

தொடர் கஞ்சா விற்பனை.. வசமாக சிக்கிய பெண் வியாபாரி..  மூன்று பேர் கைது

கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் கஞ்சா வியாபாரி உட்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

தொடர் கஞ்சா விற்பனை.. வசமாக சிக்கிய பெண் வியாபாரி..  மூன்று பேர் கைது
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

சென்னை எழும்பூர் தெற்கு கூவம் சாலையில்  பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக திருவல்லிக்கேணி துணை காவல் ஆணையர் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவல்லிக்கேணி துணை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் சிந்தாதிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் தனசேகரன் தலைமையிலான துணைக் காவல் ஆணையர் பணி படை போலீசார் தெற்கு கூவம் சாலை பகுதியை தீவிரமாக கண்காணித்தனர். 

அப்போது கஞ்சா பொட்டலம் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண்மணியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.  பின்பு அவரிடம் இருந்து சுமார் 1.400 கிலோ கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். கைது செய்த பெண்  குறித்து விசாரணை செய்த போது அவர் சென்னை புரசைவாக்கம் தாண்டவம் தெரு பகுதியை சேர்ந்த உஷா என்ற பானுமதி  என்பது தெரிய வந்தது. 

இதையடுத்து, பானுமதியின் வீட்டிற்குச் சென்று தனிப்படை போலீசார் சோதனை செய்த நிலையில் அவர் வீட்டில் கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த இரண்டு பேரை கைது செய்தனர். மேலும், பானுமதி வீட்டில் இருந்து  சுமார் 1.300 கிலோ கிராம் கஞ்சா போதை சாக்லேட்டுகளை  (பாங்கு சாக்குலெட்)  பறிமுதல் செய்தனர். கஞ்சாவை மற்ற பகுதிகளில் விற்பனை செய்வதற்கு பயன்படுத்திய ஒரு ஹோண்டா ஆக்டிவா பைக் மற்றும் கஞ்சா விற்பனை செய்து வைத்திருந்த  60 ஆயிரத்து 880 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

மேலும், கஞ்சாவை பேக்கிங் செய்து கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 1.5 கிலோ பேக்கிங் கவர் மற்றும் ஒரு பட்டாக்கத்தியை வீட்டில் இருந்து தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பானுமதி வீட்டில்  இருந்து கைது செய்யப்பட்ட இரண்டு நபர்கள் குறித்து விசாரணை செய்த பொழுது அவர்கள் பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி,  பல்லவன் சாலை பகுதியை சேர்ந்த கோகுல் என்பதும் இவர்கள் பானுமதியிடம் இருந்து கஞ்சாவை வாங்கிக் கொண்டு சென்னையில் உள்ள கல்லூரி பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. 

கஞ்சா எங்கிருந்து வாங்கி வந்து விற்பனை செய்யப்படுகிறது? என்கிற விசாரணையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து அதனை சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் பானுமதி, கோகுல் மற்றும் பாலாஜி ஆகியோர் விற்பனை செய்து வந்ததாக பானுமதி விசாரணையில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பானுமதி மீது பேசன் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் பல்வேறு கஞ்சா வழக்குகள் இருப்பதும் இவர் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது.

விசாரணைக்கு பிறகு சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து பானுமதி, கோகுல், பாலாஜி ஆகிய மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் வரும் 21-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன் பேரில் போலீசார் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.