13ஆம் தேதி அதிகாலை 2 மணி.... சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அக்கரை சோதனைச் சாவடி அருகே சென்று கொண்டிருந்த தடம் எண் 109 பேருந்து, முன்னால் சென்ற காங்கிரீட் லாரியின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. லாரியின் ஓட்டுநர் பார்த்தபோது, பேருந்து ஓட்டுநர் போதையில் இருந்தது தெரியவர, மேலும் விபத்துக்கள் நிகழலாம் என்னும் அச்சத்தில் நீலாங்கரை காவல்நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார்.
உடனடியாக போலீசார் ரோந்து வாகனத்தில் அந்தப் பேருந்தை மடக்கச் சென்றபோது, சாலையோரமாக அந்தப் பேருந்து நிறுத்தப்பட்டிருந்துள்ளது. போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது, ஓட்டுநர் இருக்கையில் இருந்தவர் மதுமயக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்க... அவரை எழுப்பிவிட்டு விசாரித்தபோதுதான், அந்த அரசுப் பேருந்தை திருடி இயக்கி வந்தது தெரியவந்துள்ளது.
இதனிடையே, பேருந்து பணிமனையில் இருந்தும் திருவான்மியூர் போலீசாருக்கு மர்மநபர் பேருந்தை திருடிச் சென்றதாக தகவல் அளித்துள்ளனர்.
இந்தச் சூழலில் நீலாங்கரை போலீசார் அளித்த தகவலின் பேரில் திருவான்மியூர் போலீசார் பேருந்தை திருடிச் சென்றவரை பேருந்துடன் கொண்டுவந்து விசாரித்தனர்.
பெசன்ட் நகரைச் சேர்ந்தவர் ஆபிரகாம். இவர் கூடுவாஞ்சேரியில் கார் டெக்னீசியனாக பணியாற்றி வந்துள்ளார். 12ஆம் தேதி வேலைக்கு செல்வதற்காக திருவான்மியூர் பேருந்து பணிமனைக்கு வந்துள்ளார். அப்போது பேருந்து நடத்துனருக்கும், ஆபிரகாமுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே, நடத்துநர் அவரைத் திட்டியதாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த, ஆபிரகாம் நடத்துனருக்கு பாடம் புகட்ட நினைத்து, இரவில் மது அருந்திவிட்டு வந்து திருவான்மியூர் பணிமனையில் படுத்துள்ளார். நள்ளிரவில் எல்லோரும் அசந்த நேரம் பேருந்தை திருடிச் சென்றது விசாரணயில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, நடத்துனருடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்காக பேருந்தை கடத்திக் கொண்டு சென்ற ஆபிரகாமை போலீசார் கைது செய்தனர்.