சென்னை: தனுஷின் 50வது படமான ராயன் இந்த வாரம் 26ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தை அவரே இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ராயன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், இப்படத்தில் தான் நடிக்கவில்லை என்றால், சூப்பர் ஸ்டார் ரஜினி தான் எனது ஹீரோ சாய்ஸ் எனத் தெரிவித்திருந்தார். அதாவது ராயன் படத்தில் ரஜினியை ஹீரோவாக நடிக்க வைக்க தனக்கு ஆசை இருந்ததாக வெளிப்படையாக கூறியிருந்தார்.
சினிமாவில் அறிமுகமானது முதலே ரஜினியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது தனுஷின் விருப்பம். இதற்காக தனுஷ் பலமுறை முயற்சித்தும் அது நடக்கவே இல்லை. ஐஸ்வர்யாவை திருமணம் செய்த பின்னரும் தனுஷால் ரஜினியுடன் நடிக்க முடியாமல் போய்விட்டது. இந்நிலையில், ரஜினியும் தனுஷும் ஒரு விஷயத்தில் மட்டும் மறைமுகமாக போட்டிப் போட்டு சம்பவம் செய்து வருகின்றனர். அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
ஐதராபாத்தில் தொடங்கிய கூலி படப்பிடிப்பு, அடுத்து சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் ரஜினியுடன் டோலிவுட் முன்னணி ஹீரோ நாகர்ஜுனா இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. கூலி படத்தில் ரஜினியுடன் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் பற்றி இதுவரை அப்டேட் வெளியாகவில்லை. ஆனால், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் நடிப்பது மட்டும் ஓரளவு கன்ஃபார்ம் ஆகிவிட்டது. இவர்களுடன் மலையாள நடிகர் செளபின் சாஹிர், தெலுங்கில் இருந்து நாகர்ஜுனா ஆகியோரும் நடிக்கவுள்ளார்களாம். நாகர்ஜுனா தற்போது தனுஷுடன் குபேரா படத்தில் நடித்து வருகிறார்.
முன்னதாக ரஜினியின் ஜெயிலர் மூவியில் கேமியோவாக நடித்திருந்த சிவராஜ்குமாரை, தனது கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க வைத்திருந்தார் தனுஷ். ஜெயிலர், கேப்டன் மில்லர் படங்களின் ஷூட்டிங் ஒரேநேரத்தில் நடைபெற்று வந்ததால், இந்த இரண்டிலும் மாறி மாறி நடித்து வந்தார் சிவராஜ்குமார். அதேபோல், இப்போது தனுஷின் குபேரா படத்தில் நடித்து வரும் நாகர்ஜுனா, அதே வேகத்தில் கூலியிலும் இணைந்துள்ளார். ஒருபக்கம் தனுஷின் குபேரா, இன்னொரு பக்கம் ரஜினியுடன் கூலி திரைப்படம் என, மீண்டும் கோலிவுட்டில் என்ட்ரியாகவுள்ளார் நாகர்ஜுனா.
ஜெயிலரில் ரஜினியுடன் நடித்த சிவராஜ்குமாரை தனுஷ் தனது கேப்டன் மில்லர் படத்துக்காக புக் செய்தார். இப்போது தனுஷுடன் நடிக்கும் நாகர்ஜுனாவை, ரஜினி தனது கூலி படத்தில் கமிட் செய்துள்ளது ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. முன்னாள் மாமனாரும் மருமகனும் இப்படியா போட்டிப் போட்டுக்கொள்வது என ரசிகர்களே கமெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தை இயக்கியபோது, அதில் நடித்த விஷ்ணு விஷாலை, தனது ராயன் படத்துக்காக தனுஷ் அப்ரோச் செய்ததாக சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.