சென்னை: தசெ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் நாளை (அக்.10) திரையரங்குகளில் ரிலீஸாகிறது. வேட்டையன் ரிலீஸுக்காக ரஜினி ரசிகர்கள் வெறித்தனமான வெயிட்டிங்கில் உள்ளனர். இந்நிலையில், வேட்டையன் படத்தின் சிறப்புக் காட்சி குறித்து ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. வேட்டையன் ஆன்லைன் புக்கிங் மூன்று தினங்களுக்கு முன்னரே தொடங்கிவிட்டது. ஆனாலும் தமிழ்நாட்டில் வேட்டையன் FDFS எப்போது என்பது கேள்விக்குரியாகவே இருந்தது.
ஆயுத பூஜையை முன்னிட்டு தொடர் விடுமுறைகள் இருப்பதால், வேட்டையன் படத்தின் டிக்கெட் புக்கிங் தாறுமாறாக இருப்பதாக சொல்லப்படுகிறது. நாளை (அக்.10) முதல் ஞாயிற்றுக்கிழமை (அக்.13) வரை வேட்டையன் படத்தின் டிக்கெட்டுகள் அதிகளவில் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் இதுவரை 1.5 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் புக் ஆகியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சிறப்பாக இருந்தாலும், முதல் நாளில் 100 கோடி கலெக்ஷன் கஷ்டம் என்றே தெரிகிறது.
கேரளா, ஆந்திரா உட்பட பெங்களூருவில் வேட்டையன் முதல் ஷோ அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படுகிறது. தமிழ்நாட்டில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கிடையாது என்பதால், ஸ்பெஷல் ஷோவுக்கு மட்டும் தமிழக அரசு பெர்மிஷன் கொடுத்துள்ளது. அதன்படி வேட்டையன் திரைப்படம் முதல் நாளில் மட்டும் காலை 9 மணிக்கு திரையிட அனுமதி கிடைத்துள்ளது. ஸ்பெஷல் ஷோ உட்பட முதல் நாளில் 5 காட்சிகள் திரையிடப்படுகின்றன. முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கலாம் எனவும், கடைசி காட்சி நள்ளிரவு 2 மணிக்குள் முடிந்துவிட வேண்டும் என்றும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து தற்போது தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில், காலை 9 மணிக்கான ஆன்லைன் புக்கிங் ஓபன் ஆகி, சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. வேட்டையன் படத்தின் மொத்த ரன்னிங் டைம், 2 மணி நேரம் 42 நிமிடங்கள் ஆகும். இதில், முதல் பாதி 1 மணி நேரம் 20 நிமிடங்களும், இரண்டாவது பாதி 1 மணி நேரம் 22 நிமிடங்களும் உள்ளன. வேட்டையனில் ரஜினிகாந்த் போலீஸ் ஆபிஸராக நடித்துள்ள நிலையில், இப்படத்தின் கதை, காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் இடையேயான பின்னணியில் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
அதாவது குற்றவாளிகளுக்கு என்கவுன்டர் தான் சரியான தீர்வு என ஆக்ஷனில் அதிரடி காட்டுகிறார் ரஜினிகாந்த். இதற்கு எதிராக நீதித்துறையில் இருந்து வாதாடுகிறார் அமிதாப் பச்சன். இந்த இருவரும் லீடிங் கேரக்டரில் நடித்துள்ள வேட்டையன், என்கவுன்டருக்கு எதிரான விவாதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி, அமிதாப்பச்சன் ஆகியோருடன் ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள வேட்டையன் படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார்.