Tamil Nadu Congress Leader Selvaperunthagai : தமிழ்நாடு காங்கிரசில் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தும்,மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இடையே மோதல் வெடித்து இருவரும் வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களவை தேர்தல் முடிந்தபிறகு திருவள்ளூரில் நடந்த கூட்டத்தில் கட்சியினர் மத்தியில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, ''2029 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும். தனித்து போட்டியிட்டால்தான் நமது பலம் தெரியும். ஆகவே 2029 மக்களவை தேர்தலுக்கு தயாராகும் வகையில் கட்சியை பலப்படுத்தும் பணியை இப்போது இருந்தே தொடங்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இதற்கு நேர் எதிராக பேசிய மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் வெற்றிபெற முக்கிய காரணம் திமுகவும், முதல்வர் ஸ்டாலினும்தான். நாம் தனித்து போட்டியிட்டு டெபாசிட் இழந்தது வரலாறு என்று கூறியது கட்சியினர் மத்தியில் பெரும் சலசலைப்பை ஏற்படுத்தியது.
இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்த கார்த்தி சிதம்பரம், ''காங்கிரஸ் கட்சி வெற்றி பெற முக்கிய காரணம் திமுகவும், கூட்டணி கட்சிகளும்தான் என்பதை யாரும் மறுக்கவில்லை. கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் நமது வாக்கு வங்கி சரிந்துள்ளது. கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய நேரம் இது'' என்று கூறினார்.
இதனால் பொங்கியெழுந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், ''சிவகங்கையில் திமுக கட்சியினர் மட்டும் வேலை பார்க்கவில்லை என்றால் கார்த்தி சிதம்பரம் டெபாசிட் கூட வாங்கி இருக்க முடியாது. எம்.பி ஆகிவிட்டால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? கூட்டணியில் குழப்பத்தை விளைவிப்பதே கார்த்தி சிதம்பரமும், செல்வபெருந்தகையும்தான்'' என்று கட்டமாக விமர்சித்தார்.
பின்பு தான் பேசிய பேச்சுக்கு விளக்கம் அளித்த கார்த்தி சிதம்பரம், ''கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்சனையையும் பேசினால்தான் மக்களிடம் நாம் முக்கியத்துவம் பெற முடியும். சமூக பிரச்சனையை பேசாமல் இருந்தால் மக்கள் நம்மை மறந்து விடுவார்கள். தமிழ்நாட்டில் காங்கிரஸ் வலுப்பெற வேண்டுமானால் இளைஞர்களை கட்சியில் அதிக அளவில் சேர்க்க வேண்டும். காங்கிரஸ் தலைமை இதை செய்யாவிட்டால் தமிழ்நாடு காங்கிரசுக்கு முன்னேற்றம் இல்லை. நான் பேசிய முழு வீடியோவை இளங்கோவன் பார்க்க வேண்டும்'' என்று கூறி இருந்தார்.
காங்கிரசில் கட்சியின் உட்கட்சி பூசல் தீவிரம் அடைந்தது, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு வெறும் வாயில் அவுல் போடுவது அமைந்து விட்டது. இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ஈவிகேஎஸ் இளங்கோவன்-கார்த்தி சிதம்பரம் மோதல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதில் அளித்த செல்வபெருந்தகை, ''தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் ஒரு பிரச்சினையும் இல்லை. காங்கிரஸ் என்பது சமுத்திரம். அதில் சிறு சிறு அலைகள் வரத்தான் செய்யும். கூட்டணி குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவு எடுக்கும். அவர்கள் கூறுவதுதான் முக்கியம். முதலமைச்சர் ஸ்டாலின் மீது தமிழ்நாடு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்தியா கூட்டணியும் முழுவதுமாக அவரை நம்புகிறது'' என்று தெரிவித்தார்.