சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் கங்குவா. சூர்யாவின் கரியரில் மிகப் பிரம்மாண்டமான படமாக கங்குவா உருவாகியுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படம் நவம்பர் 14ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில், கங்குவா படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தப் படத்தின் முதல் பாடலான ‘Fire Song’ சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது.
அதன்பின்னர் தற்போது வெளியான கங்குவா செகண்ட் சிங்கிளான ‘யோலோ’ என்ற பாடல், சூர்யா ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத், லவிதா லோபோ இணைந்து பாடியுள்ள இப்பாடலின் வரிகளை விவேகா எழுதியுள்ளார். ஃபாரின் லொக்கேஷனில் கலர்ஃபுல் பாடலாக வெளியாகவுள்ள இதில், சூர்யாவின் லுக் ரசிகர்களிடம் அதிக கவனம் ஈர்த்துள்ளது. அதேபோல், சூர்யா, திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோரின் கேரக்டரையும் ரிவில் செய்துள்ளது படக்குழு.
பீரியட் ஜானர் படமான கங்குவாவில், 20 நிமிடங்கள் மட்டும் தற்போதைய காலக்கட்டத்தில் நடப்பதாக கதை இருக்கும். இந்நிலையில், இப்போது வெளியான கங்குவா செகண்ட் சிங்கிள், தற்போதைய காலக்கட்டத்தில் நடப்பதாக உருவாகியுள்ளது. இதனால் சூர்யாவும் திஷா பதானியும் ரசிகர்களுக்கு செமையாக வைப் கொடுத்துள்ளனர். கங்குவா செகண்ட் சிங்கிளை தொடர்ந்து வரும் 26ம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள கங்குவா இசை வெளியீட்டு விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினி, பிரபாஸ் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
நவம்பர் 14ம் தேதி சிங்கிளாக வெளியாகவுள்ள கங்குவா, பாக்ஸ் ஆபிஸில் தரமான சம்பவம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு மட்டுமின்றி, இந்தியாவில் பல மொழிகளில் ரிலீஸாகிறது. அதேபோல் உலகளவிலும் ஒட்டுமொத்தமாக 32 மொழிகளில் கங்குவா ரிலீஸாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. கங்குவா இசை வெளியீட்டு விழாவை தொடர்ந்து மேலும் சில பிரம்மாண்டமான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை படக்குழு ஏற்பாடு செய்துள்ளதாம். அதுபற்றி அடுத்தடுத்த நாட்களில் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.