சினிமா

Kanguva: “100 தடவை பார்த்துட்டேன்... தரமா வந்துருக்கு..” சூர்யாவின் கங்குவா விமர்சனம் சொன்ன பிரபலம்!

சூர்யா நடித்துள்ள கங்குவா அடுத்த மாதம் 14ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படம் எப்படி வந்துள்ளது என பாடலாசிரியர் மதன் கார்க்கி விமர்சனம் தெரிவித்துள்ளார். கங்குவா படம் பற்றி மதன் கார்க்கி ட்வீட் செய்துள்ளது, சூர்யா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Kanguva: “100 தடவை பார்த்துட்டேன்... தரமா வந்துருக்கு..” சூர்யாவின் கங்குவா விமர்சனம் சொன்ன பிரபலம்!
கங்குவா முதல் விமர்சனம்

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் கங்குவா. சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கங்குவா பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கங்குவா நவம்பர் 14ம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், சூப்பர் ஸ்டார் ரஜினியும் பிரபாஸும் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக கங்குவா படத்தின் செகண்ட் சிங்கிளான ‘யோலோ’ என்ற பாடல் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. இந்நிலையில், கங்குவா படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. பாடலாசிரியரும் ஸ்க்ரிப்ட் ரைட்டருமான மதன் கார்க்கி தான், கங்குவா படம் குறித்து ட்வீட் செய்துள்ளார். இந்தப் படத்தின் வசனங்களை இயக்குநர் சிவாவுடன் மதன் கார்க்கியும் இணைந்து எழுதியுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து இந்தப் படம் குறித்து ட்வீட் செய்துள்ள அவர், “இன்று கங்குவாவின் முழு போர்ஷனையும் பார்த்தேன். டப்பிங் செய்யும் போது ஒவ்வொரு காட்சியையும் நூறு தடவைகளுக்கு மேல் பார்த்திருக்கிறேன், ஆனாலும் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் கங்குவா படத்தின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.” 

”பிரம்மாண்டமான காட்சிகள், நுணுக்கமான கலை, ஆழமான கதை, கம்பீரமான இசை என படத்தில் அனைத்தும் பவர்ஃபுல்லாக உருவாகியுள்ளன. சூர்யா கரியரில் கங்குவா தான் பெஸ்ட், இப்படியொரு படம் கொடுத்த இயக்குநர் சிவாவுக்கும், தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோ க்ரீனுக்கும் நன்றிகள்” என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் கங்குவா படத்தின் ஃபைனல் வெர்ஷன் ரெடியாகிவிட்டதும் உறுதியாகியுள்ளது. அதேநேரம் இந்தப் படம் தரமான சம்பவமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பீரியட் ஜானர் படமான கங்குவாவில், 20 நிமிடங்கள் மட்டும் தற்போதைய காலக்கட்டத்தில் நடப்பதாக கதை இருக்குமாம். மீதமுள்ள 2 மணி நேரமும் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் மொமண்ட்ஸ் என படக்குழுவினரே தெரிவித்துள்ளனர்.  

இதனால் நவம்பர் 14ம் தேதி சிங்கிளாக ரிலீஸாகும் கங்குவா, பாக்ஸ் ஆபிஸில் தரமான சம்பவம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு மட்டுமின்றி, இந்தியாவில் பல மொழிகளில் ரிலீஸாகிறது. அதேபோல் உலகளவிலும் ஒட்டுமொத்தமாக 32 மொழிகளில் கங்குவா ரிலீஸாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தற்போது கங்குவா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதில் சூர்யா, இயக்குநர் சிறுத்தை சிவா ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.