Kanguva: பிரம்மாண்டமாக நடைபெறும் கங்குவா ஆடியோ லான்ச்... சூர்யாவுக்காக ஓகே சொன்ன சூப்பர் ஸ்டார்ஸ்!
சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் 26ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. அதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸ் இருவரும் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம், நவம்பர் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைத்துள்ள இத்திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூர்யாவின் கேரியரில் இப்படியொரு பிரம்மாண்டமான மூவி இது உருவானது கிடையாது என்பதால், கங்குவா மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
கங்குவா இரண்டு பாகங்களாக வெளியாகும் என்பதால், தற்போது ரிலீஸாகும் முதல் பாகத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் தான் இருக்கும் என இயக்குநர் சிவா கூறியிருந்தார். இதில், அரை மணி நேரம் மட்டுமே தற்போதைய காலக்கட்டம் என்றும், இரண்டு மணி நேரம் பீரியட் ஜானரில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். கங்குவா படத்தின் பீரியட் ஜானர் போர்ஷன் கண்டிப்பாக ரசிகர்களுக்கு மிரட்டலான அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு உட்பட 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளிலும், ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் அங்குள்ள மொழிகளிலும் கங்குவா ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கங்குவா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக வரும் 26ம் தேதி கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாம். சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில், ஒட்டுமொத்த கங்குவா படக்குழுவினரும் பங்கேற்கவுள்ளனர். மேலும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். இதனிடையே கங்குவா இசை வெளியீட்டு விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினியும், பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூர்யாவும் பிரபாஸும் ஏற்கனவே நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படத்துக்காக, கங்குவா ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்தார் சூர்யா. அதுகுறித்து சூர்யாவே வெளிப்படையாக தெரிவிக்க, சூப்பர் ஸ்டாரும் அதற்கு நன்றி கூறியிருந்தார். அதேபோல் சிவா இயக்கிய அண்ணாத்த படத்தில் ரஜினி ஹீரோவாக நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனால் கங்குவா இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க ரஜினிக்கும் பிரபாஸுக்கும் படக்குழு அழைப்பு விடுத்துள்ளதாம். இதனால் கங்குவா இசை வெளியீட்டு விழா தரமான சம்பவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?