பார்ட்டியில் பழக்கம்.. போதைப்பொருள் சப்ளைக்கு வாட்ஸ்அப் குழு - துணை நடிகை அதிர்ச்சி
நண்பர்களுடன் பார்ட்டிச் செல்லும்போது, போதைப்பொருள் பழக்கம் ஏற்பட்டதாகவும், போதைப்பொருள் சப்ளை செய்வதற்காக தனி வாட்ஸ்அப் குழு உருவாக்கியதாகவும் துணை நடிகை மீனா தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் ஒழிப்பு நுண்ணறிவு பிரிவைச் சேர்ந்த போலீசார், சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல மால் அருகே வைத்து மெத்தபட்டமைன் போதை பொருள் வாங்க வந்த ஒரு இளம் பெண்ணை சுற்றி வளைத்துள்ளனர். அவரிடம் இருந்து 5 கிராம் மெத்தப்பட்டமைன் போதைப் பொருட்களை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட பெண் மேடவாக்கம் கண்ணதாசன் தெருவை சேர்ந்த 27 வயதான எஸ்தர் என்ற மீனா என்பதும், இவர் சினிமா மற்றும் சீரியல்களில் துணை நடிகையாக இருந்து வருவதும் தெரிய வந்தது.
சினிமா நட்சத்திரங்கள் பங்குக்கொண்ட பார்ட்டி மற்றும் பப்பிற்கு செல்லும் போது போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டதாக துணை நடிகை மீனா தெரிவித்துள்ளார். மேலும், நண்பர்கள் பயன்படுத்தும் போது, அதை பார்த்து அவரிடம் கேட்டு, போதை பொருள் சப்ளை செய்யும் முக்கிய நபரின் அறிமுகம் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கணவர் இல்லாததால் வீட்டில் வறுமை ஏற்பட்டு சினிமா மற்றும் சீரியலில் துணை நடிகையாக நடித்ததாகவும் குறிப்பாக டெடி உள்ளிட்ட சில திரைப்படங்களிலும், சுந்தரி உள்ளிட்ட சில சீரியல்களிலும் துணை நடிகையாக நடித்திருப்பதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
சினிமா மற்றும் சீரியல்களில் வாய்ப்பு அடிக்கடி வராததால் பண தேவைக்காக மெத்தபெட்டைமைன் போதைப் பொருட்களை விற்பனை செய்ய தொடங்கியதாகவும், குறிப்பாக ஹோல்சேலில் வாங்கினால் போலீசாரிடம் சிக்கிக் கொள்வோம் என கிராம் கணக்கில் மட்டுமே வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார்.
அதோடு, மெத்தபட்டமைனை வாங்கிய தொகைக்கு மேலே மூன்றாயிரம் ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்யும் பணியில் மீனா ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் போதைப் பொருட்களை சப்ளை செய்ய whatsapp குழு ஒன்று இருப்பதாகவும், அதில் ஹோல்சேல் டீலர்கள் இருப்பார்கள் எனவும் அதில் எவ்வளவு போதை பொருள் வேண்டுமோ குறிப்பிட்டால், ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கே வர கூறுவார்கள்.
அதன்படி ஐந்து கிராம் மெத்தப்பட்டைமைன் போதை பொருட்களை வாங்குவதற்காக ராயப்பேட்டை பகுதிக்கு மீனா சென்றபோது போதைப் பொருள் ஒழிப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். ஏற்கனவே, போதைப் பொருள் ஒழிப்பு நுண்ணறிவு பிரிவைச் சேர்ந்த போலீசார், சென்னை உயர் நீதிமன்றம் அருகே பிரகாசம் சாலையில், இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு இளைஞர்களிடம் 2 கிராம் மெத்தப்பட்டமைன் போதை பொருளை கைப்பற்றி இருந்தனர்.
அதுமட்டுமல்லாமல், மணலி பகுதியைச் சேர்ந்த 25 வயதான சகிமா மௌசியா என்ற பெண்ணிடம் இருந்தும் 5 கிராம் மெத்தப்பட்டமைன் கைப்பற்றினர். இவர் மெத்தம்பெட்டமைன் போதை பொருளை மொத்தமாக வாங்கி இளைஞர்கள் சிறுவர்களை வைத்து கல்லூரி மாணவர்களுக்கும் மதுபான விடுதி, பப்புகளுக்கும் சப்ளை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?