GOAT: விஜய்யின் கோட் படம் பார்த்த ரஜினிகாந்த்... “நன்றி தலைவா..” எமோஷனலான வெங்கட் பிரபு!
விஜய்யின் கோட் திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியதாக இயக்குநர் வெங்கட் பிரபு ட்வீட் போட்டு ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுத்துள்ளார்.
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படம், செப்.5ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்திருந்தார். மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான கோட் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. வெங்கட் பிரபுவின் கதையும் திரைக்கதையும் எதிர்பார்த்தளவுக்கு இல்லை என ரசிகர்கள் விமர்சனம் செய்திருந்தனர். ஆனால், விஜய் சினிமாவில் இருந்து அரசியலுக்கு செல்ல முடிவு செய்துவிட்டதால், கோட் படம் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக திரையரங்குகளுக்குச் சென்றனர்.
இதனால் கோட் படம் பாக்ஸ் ஆபிஸில் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனிடையே கோட் படத்தின் கதை குறித்து சமீபத்தில் வெங்கட் பிரபு ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்தார். அதில், கோட் கதையும் கேப்டன் விஜயகாந்தின் ராஜதுரை படத்தின் கதையும் ஒன்று என, ரிலீஸுக்குப் பின்னர் தான் தெரியும். முன்பே தெரிந்திருந்தால் ராஜதுரை படம் பார்த்துவிட்டு கோட் இயக்கியிருப்பேன், இன்னும் நன்றாக வந்திருக்கும் என்றார். ஆனாலும் ராஜதுரையை விட கோட் படம் நன்றாக வந்துள்ளதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் ட்விட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், கோட் படம் பார்த்துவிட்டு பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நன்றி தெரிவித்துள்ளார் வெங்கட் பிரபு. கோட் பார்த்துவிட்டு படம் பற்றி மனம் திறந்து பாராட்டியதற்கு மிக்க நன்றி, உங்களுக்கு எனது அன்பு என ட்வீட் செய்துள்ளார். இதன்மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய்யின் கோட் படம் பார்த்துள்ளது உறுதியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான படங்களில் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்ற படங்களை ரஜினிகாந்த் தவறாமல் பார்த்துவிடுகிறார்.
அதோடு அந்தப் படங்களில் இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்தும் பாராட்டி வருகிறார். அப்படியே விஜய்யின் கோட் படத்தையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளது இருதரப்பு ரசிகர்களுக்கும் செம வைப் கொடுத்துள்ளது. முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படத்தை தியேட்டரில் சென்று பார்த்து ரசித்தார் விஜய். சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவி தியேட்டரில், வேட்டையன் படத்தின் முதல் காட்சியை பார்த்துவிட்டு ரகசியமாக காரில் ஏறிச் சென்றார் விஜய். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
ஆனால், வேட்டையன் படம் குறித்து தளபதி விஜய் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. விஜய்யுடன் இயக்குநர் வெங்கட் பிரபுவும் வேட்டையன் படம் பார்த்திருந்தார். இதுபற்றியும் சமீபத்தில் பேசிய வெங்கட் பிரபு, தளபதி விஜய்யுடன் சேர்ந்து கோட் படம் பார்த்து என்ஜாய் செய்தோம், எப்போதுமே நாங்கள் தலைவரின் ரசிகர்கள் தான் என கூறியிருந்தார். இந்தச் சம்பவம் நடந்த சில தினங்களிலேயே விஜய்யின் கோட் படம் ரஜினி பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?