விளையாட்டு

IND vs SL: இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி... இந்திய அணி படுதோல்வி!

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளது. மேலும், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை, இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது.

IND vs SL: இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி... இந்திய அணி படுதோல்வி!
இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில்இந்திய அணி படுதோல்வி

கொழும்பு: இலங்கை சுற்றுப் பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, முதலில் மூன்று டி 20 போட்டிகளில் விளையாடியது. இந்த மூன்றுப் போட்டிகளிலும் இந்தியா வெற்றிப் பெற்று இலங்கையை வாஷ் அவுட் செய்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடரை, 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. முதல் ஒருநாள் போட்டி வெற்றி தோல்வி இன்றி டை ஆனது. அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணியின் அபாரமான பந்துவீச்சில் இந்திய அணி சரண்டர் ஆனது.

இதனால் தற்போது நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மீது ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இப்போட்டியை வென்று ஒருநாள் தொடரை இந்திய அணி சமன் செய்யும் என ரசிகர்கள் காத்திருந்தனர். இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து இலங்கை அணியின் நிஷாங்கா, அவிஷ்க பெர்னாண்டோ இருவரும் ஓபனர்களாக களமிறங்கினர். இந்த இணை இந்திய பந்துவீச்சாளர்களை திறம்பட எதிர்கொண்டது. இதனால் இலங்கை அணியின் ஸ்கோர் சீரான வேகத்தில் உயர்ந்துகொண்டே இருந்தது.

19.5 ஓவரில் 89 ரன்கள் எடுத்திருந்த போதுதான் இலங்கை அணி தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. அதன்படி, அக்ஷர் பட்டேல் பந்துவீச்சில் ரிஷப் பன்ட் இடம் கேட்ச் கொடுத்து 45 ரன்களில் ஆட்டமிழந்தார் நிஷாங்கா. அவரைத் தொடர்ந்து களமிறங்கிய குஷால் மெண்டீஸும் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு போக்கு காட்டி ஆடினார். அதேநேரம் செஞ்சுரியை நெருங்கிக் கொண்டிருந்த அவிஷ்க பெர்னாண்டோ 102 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 4 ரன்களில் சதத்தை தவறவிட்டபடி பெவிலியன் திரும்பினார் அவர். அதேபோல், குஷால் மெண்டீஸ் 59 ரன்களில் அவுட் ஆக, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.

மேலும் படிக்க - வினேஷ் போகத் தகுதி நீக்கம் பின்னணியில் சதி

இதனால், இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரியான் பராக் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், சிராஜ், அக்ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனையடுத்து 249 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, ரோஹித் சர்மாவும் சுப்மான் கில்லும் ஓபனர்களாக களமிறங்கினர். ஆனால், சுப்மான் கில் 6 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் ரோஹித் சர்மா சிறிது நேரம் அதிரடி காட்டிய திருப்தியில் அவரும் நடையை கட்டினார். 20 பந்துகளில் 35 ரன்கள் எடுத்த ரோகித் சர்மாவின் விக்கெட்டை துனித் வெல்லலகே கைப்பற்றினார். அவரைத் ரிஷப் பண்ட், விராட் கோலி, அக்ஷர் பட்டேல், ஷ்ரேயாஸ் அய்யர், ரியான் பராக், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் என மொத்த இந்திய அணி வீரர்களும் ஒருவர் பின் ஒருவராக பெவிலியன் திரும்பினர். இதனால் இந்திய அணி 26.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன் காரணமாக இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிப் பெற்றது. இலங்கை அணியின் துனித் வெல்லலகே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை திக்குமுக்காடச் செய்தார். மகேஷ் தீக்ஷனா, ஜெஃப்ரி வாண்டர்சே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். போட்டியின் ஆட்ட நாயகனாக அவிஷ்க பெர்னாண்டோவும், தொடர் நாயகனாக துனித் வெல்லலகேவும் தேர்வானர்கள். இந்தத் தொடரை வென்றதன் மூலம் இலங்கை அணி 27 ஆண்டுகளுக்குப் பின்னர் வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதாவது 1997ம் ஆண்டுக்குப் பின்னர் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை இலங்கை அணி கைப்பற்றியதில்லை. அது தற்போது இலங்கை அணி வசமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.