கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே உள்ள ஆசாரிவிளை கிராமத்தை சேர்ந்தவர் 90 வயதான சந்திரபோஸ். பனையேறும் தொழிலாளியான இவருக்கு லெட்சுமி என்ற மனைவியும் 3-பெண் 3-ஆண் என ஆறு பிள்ளைகள் உள்ளனர். ஆறுபேரும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். சந்திரபோஸ் பனையேறும் தொழில் செய்து வந்ததோடு மனைவி லெட்சுமியுடன் சொந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். தனது வருமானத்தில் மனைவியை பராமரித்து வந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வயது முதிர்வால் நோய்வாய்பட்ட லெட்சுமி படுத்த படுக்கையாகியுள்ளார். பார்த்து பார்த்து வளர்த்த 6 பிள்ளைகளும் தாயை பராமரிக்க தவறிய நிலையிலும் சந்திரபோஸ் தன்னால் முடிந்த வேலைகளுக்கு சென்று தனது மனைவியை கவனித்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் வயது முதிர்வால் சந்திரபோஸ் வேலைக்கு செல்ல முடியாமல் படுக்கையான தனது மனைவியையும் பராமரிக்க முடியாமல் ஏக்கத்தில் இருந்து வந்துள்ளார். இதற்கிடையே கழிந்த மூன்று மாதங்களுக்கு முன் சந்திரபோஸிற்கு இரு கண் பார்வையும் சுத்தமாக பறி போன நிலையில் மனைவியை சுத்தமாக பராமரிக்க முடியாமல் போகவே மனைவியின் உடல் முழுவதும் கொப்பளங்கள் ஏற்பட்டு அலறி துடித்து வந்துள்ளார். இரவு நேரங்களில் இருவரும் இயற்கை உபாதைகள் கூட கழிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதனால் சந்திரபோஸ் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வந்துள்ளார்.
இந்த நிலையில் வேதனையின் உச்சத்திற்கே சென்ற சந்திரபோஸ் பார்த்து பார்த்து வளர்த்த பிள்ளைகளும் கண்டு கொள்ளவில்லை இனி வாழ்ந்து என்ன பலன் என்று கண் தெரியா போதும் தட்டு தடுமாறி வீட்டினுள் இருந்த கத்தியை எடுத்து வந்து படுக்கையில் கிடந்த தனது மனைவியை கழுத்தை அறுத்து கருணை கொலை செய்துள்ளார். இளைய மகன் சாந்தகுமார் மதியம் உணவு கொண்டு சென்றபோது சந்திரபோஸ் கண் கலங்கியபடி வீட்டின் முன் அமர்ந்திருப்பதை கண்டு விசாரித்துள்ளார். ஆனால் அவர் பதில் ஏதும் பேசாததால் வீட்டிற்குள் சென்று பார்த்த போது தாய் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து இரணியல் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டி லெட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: MUDA வழக்கு.. கைவிரிவித்த உயர்நீதிமன்றம்.. சித்தராமையா பதவிக்கு ஆபத்து?
மேலும் சந்திரபோஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். 90 வயதான சந்திரபோஸ் நோய்வாய்பட்டு கண் பார்வை இழந்து காணப்பட்டதால் அவரை கைது செய்து இரணியல் சிறைக்கு அனுப்பாமல் மற்றொரு ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பார்த்து பார்த்து வளர்த்த பிள்ளைகள் பராமரிக்க தவறியதால் தந்தை விபரத முடிவை தேடிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.