திருமணம் செய்வதாக ஏமாற்றி மோசடி செய்த இளைஞர்... சீரியல் நடிகை பரபரப்பு புகார்
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 6 லட்சம் பணம், நகை பறித்து கொண்டு மோசடியில் ஈடுபட்ட காதலன் மீது சின்னத்திரை நடிகை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை சூளைமேடு காமா ராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் சின்னத்திரை நடிகை அருணிமா (26). பல்வேறு தொலைக்காட்சி தொடரில் நடித்து புகழ் பெற்ற இவர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சின்னத்திரை தொடரில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சின்னத்திரை நடிகை அருணிமா, அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தான் சின்னத்திரையில் நடிகையாக உள்ளதாகவும், சூளைமேடு பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சந்தோஷ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியதை நம்பி இருவரும் கணவன் - மனைவி போல் ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும், அவர் மீது கொண்ட அதீத காதல் காரணமாக அவர் கேட்கும் போதெல்லாம் பணம், நகைகளை கொடுத்து உதவியதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
நாளடைவில் சந்தோஷ் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்ததால் அது குறித்து அவரிடம் கேட்ட போது முறையாக பதில் அளிக்காமல் தட்டி கழித்து வந்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் இருவரும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் ஒரு கட்டத்தில் சந்தோஷ் தன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்து விட்டார் என்றும் அதனால் தன்னிடம் இருந்து வாங்கிய 6 லட்சம் பணம், 2 சவரன் தங்க நகைகளை திருப்பி தருமாறு கேட்டதற்கு சந்தோஷ் மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்டதுடன் தன்னிடம் இருந்து பணம், நகைகளை பெற்று மோசடியில் ஈடுபட்ட காதலன் சந்தோஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சின்னத்திரை நடிகை அருணிமா தனது புகாரில் கேட்டுள்ளார்.
நடிகை புகாரின் பேரில் அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?