சினிமா

Seeman : ‘நந்தன் என்னை வெகுவாக பாதித்த திரைப்படம்’.. உருகிய சீமான்!

Seeman Praised Nandhan Movie : ''கலையைப் போற்றுவதும், கலைஞர்களைக் கொண்டாடுவதும் சமூகத்தின் தார்மீகக் கடமையாகும். ஆகவே, சமத்துவத்தைப் போதிக்கும் ‘நந்தன்’ எனும் உன்னதப்படைப்பைக் கண்டுகளிப்போம்! நற்கருத்துகளை விதைக்கும் மக்களுக்கான கலைஞர்களைக் கொண்டாடுவோம்’’ என்று சீமான் கூறியுள்ளார்.

Seeman : ‘நந்தன் என்னை வெகுவாக பாதித்த திரைப்படம்’.. உருகிய சீமான்!
Seeman Praised Nandhan Movie

Seeman Praised Nandhan Movie : இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ’நந்தன். இந்த படத்தில் ஸ்ருதி பெரியசாமி, சமுத்திரக்கனி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாரத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தலித் மக்களின் வாழ்க்கையை கருவாக கொண்ட நந்தன் திரைப்படம் விமர்சனரீதியாக பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நந்தன் திரைப்படத்தை புகழந்து தள்ளியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘’அன்பிற்கினிய உறவுகளுக்கு, தம்பி தங்கைகளுக்கு! வணக்கம்.

ஆருயிர் இளவல் இரா.சரவணன் இயக்கத்தில், அன்புத்தம்பி சசிக்குமார் அவர்களது நடிப்பில் வெளியாகியிருக்கும், ‘நந்தன்’ எனும் கலைப்படைப்பு மக்கள் மனதை வென்றிருப்பதை அறிவீர்கள்! ‘தமிழ்த்தேசியம்’ எனும் ஒப்பற்ற கருத்தியலைத் தூக்கிச் சுமந்து, அதனை அடைய தேவையான தமிழர் ஓர்மையின் பேரவசியத்தை வலியுறுத்தி, 15 ஆண்டுகளாக அயராது கருத்தியல் பரப்புரையும், களப்பணியும் ஆற்றி வருகிறோம். தரையில் நாம் பேசிய சமூக விடுதலையையும், சாதியக் கொடுமைகளையும் வலிமாறாது, திரைமொழியில் பதிவுசெய்திருக்கும் ‘நந்தன்’ திரைப்படம் என்னை வெகுவாகப் பாதித்தது. 

நம்மைப் போல, நாடி, நரம்பு, எலும்பு, சதை, இரத்தம், கனவு, உறக்கம், பசி என எல்லாம் கொண்டிருக்கிற சக மனிதனைப் பிறப்பை அடிப்படையாக வைத்துத் தாழ்த்துவதும், சமூகத்திலிருந்து ஒதுக்கித் தள்ளுவதும், உரிமைகளையும், வாய்ப்புகளையும் முற்றாக மறுப்பதுமான செயல்பாடுகள் ஓர் உளவியல் நோயின் வெளிப்பாடு. சாதி எனும் பெயர்கொண்ட இச்சமூகப்பிணியை நீக்க, தனது வாழ்நாள் முழுமைக்கும் அரும்பாடாற்றி உழைத்து, தனது அறிவையும், அதிகாரத்தையும் அதற்காகப் பயன்படுத்திய நம் முன்னோர்கள் வழிமொழிந்த சமத்துவக்கோட்பாட்டையும், சனாதனத்துக்கு எதிரான அறநெறிச்செயல்பாட்டையும் இரண்டே மணி நேரத்தில் மக்களிடையே கொண்டுபோய் சேர்க்கும் ஆகப்பெரும் பணியை இப்படைப்பு திறம்படச் செய்கிறது. 

‘கலை, இலக்கியப் படைப்புகள் மக்களைச் சிந்திக்கத் தூண்ட வேண்டும். பழமையிலும், பொய்மையிலும், பல்வேறு மாயைகளிலும் சிறைப்பட்டுக் கிடக்கும் மக்கள் மனதில் புரட்சிகரப் பார்வையைத் தோற்றுவிக்க வேண்டும். மாறிவரும் சமூக விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்’ என்கிறார் தமிழ்த்தேசியத் தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன். அப்புரட்சி மொழிக்கிணங்க, கலையும், இலக்கியமும் முழுக்க முழுக்க மக்களுக்கானவைதான். மக்களை அரசியல்படுத்தவும், அநீதிக்கெதிராக அணிதிரட்டவும், சமத்துவம் எனும் சமூகநீதிக்கோட்பாட்டை மக்கள் மனதில் விதைக்கவுமாக கலையும், இலக்கியமும் பணிசெய்ய வேண்டும். 

மேடை நாடகம், தெருக்கூத்து போன்றவற்றின் பரிணாம வளர்ச்சியாகவும், நவீன அறிவியலின் குழந்தையாகவும் இருக்கிற திரைப்படங்கள் அதனை முதன்மையாய் செய்ய வேண்டும். அதற்கிணங்க, தனது சமூகக்கடமையையும், கலைப்பங்களிப்பையும் மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறது நந்தன் எனும் ஆகச்சிறந்த படைப்பு. கலையைப் போற்றுவதும், கலைஞர்களைக் கொண்டாடுவதும் சமூகத்தின் தார்மீகக் கடமையாகும். ஆகவே, சமத்துவத்தைப் போதிக்கும் ‘நந்தன்’ எனும் உன்னதப்படைப்பைக் கண்டுகளிப்போம்! நற்கருத்துகளை விதைக்கும் மக்களுக்கான கலைஞர்களைக் கொண்டாடுவோம்’’ என்று கூறியுள்ளார்.