தொழிற்சங்க அங்கீகாரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுங்காசத்திரம் பகுதியில் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தத் தீர்வும் எட்டப்படாமல் இருந்தது. இதையடுத்து போராட்டத்திற்கு விரைந்து தீர்வு காணுமாறு அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இருங்காட்டுக்கோட்டில் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ராஜேஷ் முன்னிலையில் சாம்சங் நிறுவனம் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகள் ஆகியோருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து சாம்சங் உயர் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் 3 அமைச்சர்களும் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினர். அப்போது தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.
இதன்பின் சாம்சங் நிர்வாகம்(Samsung Company), தொழிலாளர்களுடன் தமிழக அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இந்த மாதம் முதல் அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.5,000 சம்பள உயர்வு வழங்கி உள்ளதாக ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சங்க விவகாரத்தில் தொழிலாளர்களின் பிரதிநிதி குழு ஒன்று அமைக்கப்பட்டு, பிரச்சினைகள் குறித்து பேசப்படும் என ஒப்பந்தத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தலைவிரித்தாடும் ரூட்டு தல மோதல்... மாநில கல்வி மாணவர் உயிரிழப்பு!
இந்நிலையில் நேற்றைய தினம், ஊழியர்கள் சிலர் போராட்டத்தில் பங்கேற்பதற்காக வரும்போது டெம்போ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் இதன் பின்னால் சதி இருப்பதாகக் கூறி ஊழியர்கள் சிலர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரவோடு இரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஊழியர்களை வீடு புகுந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாக நின்று ஊழியர்களை தமிழ்நாடு அரசு வஞ்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.