வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ளது தி கோட் திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வருகிறது. அதேநேரம் இத்திரைப்படம் குறித்து பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பாக, எத்தனையோ நடிகர்கள் இருந்தும், மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தை ஏஐ மூலம் கொண்டு வந்தது எதற்காக என்ற கேள்வி முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஒருபக்கம், தன் கெரியர் பிரகாசமாவதற்கு காரணமான விஜயகாந்திற்கு நன்றி செலுத்துவதற்காகத்தான் இப்படி ஒரு முடிவை விஜய் எடுத்ததாக கூறப்படுகிறது. காரணம் என்னதான் தமிழ் சினிமாவில் விஜய் இன்று உச்ச நட்சத்திரமாக வலம் வந்தாலும், அவருக்கு மிக வலிமையான தொடக்கத்தை உருவாக்கிக் கொடுத்தது விஜயகாந்த் தான்.
நிலையான தொடக்கம் இல்லாமல் தவித்து வந்த விஜய்யை எப்படியாவது முன்னுக்கு கொண்டுவர வேண்டு என்று நினைத்த அவரது தந்தையும், இயக்குநருமாக எஸ்.ஏ.சந்திரசேகர், அதற்காகவே செந்தூரபாண்டி படத்தை இயக்கினார். 1993 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் தன்னுடைய தம்பி என விஜயகாந்த் அடையாளப்படுத்திய பிறகு தான், விஜய்யின் சினிமா வாழ்க்கை உச்சத்தை எட்ட அச்சாரமாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல், அப்படத்திற்கு பிறகு விஜய்கென்று விஜயகாந்த் மனதில் தனி இடமும் உருவானது. விஜய்க்கும் அதேதான். தன் வாழ்க்கைக்கே அர்த்தம் கொடுத்த விஜயகாந்தின் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய், நீண்ட நேரம் கண்கலங்கியபடி நின்று கொண்டிருந்தார். இச்சம்பவம் விஜயகாந்த் – விஜய் இடையே எத்தகைய பந்தம் இருந்தது என்பதை விளக்கியது.
இந்த பாசத்தின் அடிப்படையில் தான் தன்னுடைய கடைசி படங்களில் ஏதேனும் ஒன்றில் விஜயகாந்தை இடம்பெற செய்ய வேண்டும் என்று விஜய் விரும்பியதாகவும், அது ‘தி கோட்’ படத்தில் நிறைவேறியதாகவும் கூறப்படுகிறது. மறுபக்கம், சினிமாவிற்கு முழுக்கு போட்டு முழுநேர அரசியலில் களமிறங்கவுள்ளதால், விஜயகாந்த் ரசிகர்களின் வாக்குகளை கவருவதற்காகவே அவரை தனது படத்தில் ஏஐ மூலம் கொண்டுவந்துள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
முழுநேர அரசியல்வாதியாகிவிட்டால், அதன்பிறகு சினிமாவில் அரசியல் கருத்துகளை பேச முடியாது, பிரசாரம் செய்ய முடியாது. இதனால், இறுதியாக நடிக்கும் இரண்டு படங்களிலாவது வாக்குகளை கவரும் வண்ணம் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதெல்லாம் செய்ய விஜய் நினைத்தாராம். அதுதான் விஜயகாந்த் ரசிகர்களின் வாக்குகளை கவர ஏஐ மூலம் விஜயகாந்தை கொண்டுவந்தார் என்று கூறப்படுகிறது. அதோடு, தேமுதிக – தவெக கூட்டணிக்காகவும் விஜயகாந்தை பயன்படுத்தியதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக வெற்றிக் கழகம் தேர்தலை சந்திக்க வேண்டும் என்றால், அனுபவம் கொண்ட ஒரு கட்சியுடன் பயணிக்க வேண்டும். அப்படி இருக்கையில் திமுக, அதிமுக கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதை தவெக பாடல் மூலம் பதிலளித்துவிட்டார் விஜய்.
எனவே, தன் அண்ணனான விஜயகாந்த் தொடங்கிய தேமுதிகவுடன் கூட்டணி வைக்க நினைத்துதான் விஜய் இப்படி செய்துள்ளார் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருந்து வருகிறது. ஏற்கனவே விஜய் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியதோடு, தவெக மாநாட்டில் ராகுல்காந்தி கலந்துகொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், இது எந்தளவிற்கு உண்மை என்பதை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறினால் மட்டுமே தெரியும்.
இந்த நிலையில், தவெக – தேமுதிக கூட்டணி குறித்த செய்திகள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எது எப்படியோ, விஜயகாந்தை ஏஐ மூலம் கொண்டுவந்தது விஜய்க்கு கைக்கொடுத்துள்ளது என்றே சொல்லவேண்டும். விஜயகாந்தை இனி தியேட்டரில் பார்க்கவே முடியாது என்றிருந்த ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அளித்தது ‘தி கோட்’ திரைப்படம். எனவே, இதன்மூலம் விஜயகாந்த் ரசிகர்களையும் விஜய் கவர்ந்துவிட்டார் என்றே சொல்லவேண்டும்.