அரண்டுபோன பொதுமக்கள்.. பாலத்தில் அணிவகுத்த கார்கள்.. அபராதம் விதித்ததா போலீஸ்?
மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு போலீஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள போலீஸார், பொதுமக்களுக்கு உதவிகள் வழங்க காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணையும் வழங்கியுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரி உடைந்ததில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் கடந்த 2023ஆம் ஆண்டு பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ளத்தினால், பெரும் சேதங்கள் நிகழ்ந்தன. இந்த பெருவெள்ளங்களால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளித்தது. இந்த வெள்ளத்தில் வீடுகள் மூழ்கியதோடு மட்டுமல்லாமல், கார்களும் அடித்துச் செல்லப்பட்டன.
குறிப்பாக கடந்த ஆண்டு வேளச்சேரியில் பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. மழை நீருடன் கழிவு நீர் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்ததால் பலரும் தங்களது உடைமைகளுடன் சொந்த ஊருக்கு மக்கள் புறப்பட்டுச் சென்றனர். மேலும், நூற்றுக்கணக்கான கார்களும், இரு சக்கர வாகனங்களும் பழுதடைந்தன.
இந்நிலையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பெருவெள்ளங்களில் பாடம் கற்றுக்கொண்ட பொதுமக்கள், வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கார் உரிமையாளர்கள் தங்களது கார்களை மேம்பாலத்தின் மீது வரிசையாக நிறுத்தி உள்ளனர்.
இதனையடுத்து, வேளச்சேரி மேம்பாலத்தின் மீது கார்களை நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி, போக்குவரத்து காவல் துறையினர், அபராதம் விதித்ததாக தகவல்கள் பரவியது. மேலும், கார்களை அப்புறப்படுத்தாதவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1000 வீதம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பொதுமக்கள் வாகனங்களை பாலத்தின் மீது நிறுத்த எவ்வித தடையும் இல்லை, அபராதம் வசூலிக்கபடாது என தாம்பரம் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. மேலும், காவல் துறையினரிடம் இருந்து ஏதேனும் உதவிகள் தேவைபடும் பட்சத்தில் கட்டுப்பாட்டு அறை எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கூறியுள்ள காவல்துறையினர், “பாலங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதாக வதந்தி பரவி வருகிறது. அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். அத்தகைய வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.
தாம்பரம் மாநகரில் உள்ள அனைத்து போக்குவரத்து காவலர்களுக்கும் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையில், வசதிக்காக தாம்பரம் நகர போலீசார் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சவாலான வானிலையின் போது வாகனங்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் நிறுத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில், அருகிலுள்ள வாகன நிறுத்துமிடங்களைக் கண்டறிய, குடிமக்களுக்கு எங்கள் காவல் கட்டுப்பாட்டு அறை உதவும். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதியே எங்களின் முதன்மையான முன்னுரிமைகள் மற்றும் தேவையான ஆதரவை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் எதேனும் உதவி தேவைபட்டால் இந்த எண்ணை தொடர்பு கொள்ள தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
போலீஸ் கட்டுப்பாட்டு எண்: +9194981 81500
What's Your Reaction?