தொல்குடி தமிழர்களாகவும், நாடோடிகளாகவும் கருதப்படும் பழங்குடி இன மக்கள் [நரிக் குறவர் சமூகத்தினர்] மலைப்பகுதிகளில் பெரும்பாண்மையாக வசித்து வருகின்றனர். தேன் எடுத்தல், மூலிகை மருத்துகள் தயாரித்தல், பறவைகள் மற்றும் விலங்குகளை வேட்டையாடுதல், பச்சைக் குத்துதல், ஊசி, மணிகள் விற்பனை செய்தல் போன்ற தொழிலகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீண்ட காலங்களுக்குப் பிறகு தற்போது தான் இவர்கள், கல்வியறிவை பெற்றுவரும் நிலையில், இவர்களுக்கு சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றுதல், மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் கிடைப்பது பெரும்பாடாக இருக்கின்றது. இதனால் தங்கள் குழந்தைகளை மேற்படிப்பு அனுப்ப முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதே போல, தாங்கள் வசிக்கும் நிலங்களுக்கு பட்டா, சிட்டா உள்ளிட்ட நில வகைப்பாடு சான்றிதழ்களை பெருவதிலும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் ஜெயா நகர் நரிக்குறவர் காலணி அமைந்துள்ளது. இங்கு நீண்ட காலமாக 100க்கும் மேற்பட்ட நரிக் குறவர்கள் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த இடத்தில் ராஜேஸ்வரி என்பவர் நீதிமன்ற ஆணை உள்ளதாக கூறி ஒரு பகுதியில் சுற்றுச்சுவர் எழுப்பி வந்துள்ளார்.
இதனால் அங்கு வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. இந்த நிலையில் இரு தரப்பு இடையே திடீரென தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 காவல் உதவி ஆணையர்கள் தலைமையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர்.
அப்பொழுது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சுற்று சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற நரிக்குறவர் இன மக்களை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். மேலும் சில பெண்களை பெண் காவலர்கள் ஒன்று கூடி சரமாரியாக தாக்கி பேருந்தில் ஏற்றி கைது செய்யும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.