நீலாங்கரை மற்றும் விருகம்பாக்கம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 54.5 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 5 செல்போன்கள் பறிமுதல் செய்தனர்.
சென்னை நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படை போலீசார் அக்கரை, கிழக்கு கடற்கரை சாலை, சன்ரைஸ் அவென்யூ பேருந்து நிறுத்தம் அருகே மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் வைத்திருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ரகு, திருவண்ணாமலையைச் சேர்ந்த கண்ணன், கேமரூன் நாட்டைச் சேர்ந்தவர் ஜொனாதன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 51 கிராம் மெத்தம்பெட்டமைன், 4 செல்போன்கள், 1 எடை இயந்திரம் மற்றும் பணம் ரூ.400 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ரகு, கண்ணன், கேமரூன் ஆகிய 3 பேரும் விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதே போல, விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படை போலீசார் நேற்று இரவு, விருகம்பாக்கம், பள்ளிக்கூடம் முதல் தெருவிலுள்ள மார்க்கெட் அருகில் கண்காணித்து, அங்கு மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த விருகம்பாக்கத்தைச் சேர்ந்த அன்புகிரி என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 3.5 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரி அன்புகிரி விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னையில் போதைப்பொருள் கடத்தல், விற்பனை வழக்குகளில் கைது செய்யப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், போலீசார் சென்னையில் பல்வேறு இடங்களில் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.