இந்தியா

IMF Strike : நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டம்... இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிவிப்பு!

Indian Medical Federation Hunger Strike : நீதி வேண்டி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை (அக். 15) நாடு தழுவிய ஒரு நாள் உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐ.எம்.ஏ) அறிவித்துள்ளது.

IMF Strike : நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டம்... இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிவிப்பு!
நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டம்...

Indian Medical Federation Hunger Strike : கொல்கத்தாவில் கடந்த மாதம் (செப்) 9 ஆம் தேதி அன்று தனியார் மருத்துவக்கல்லூரி வளாகத்தின் உள்ளேயே பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.  

மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவில் உள்ள மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகள் பாதுகாப்பை உறுதி செய்ய மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

ஒருபக்கம் விசாரணை நடைபெற்று வந்தாலும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை விரைந்து வழங்கவும், பெண் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

‘மாநில சுகாதார துறை செயலர் என்.எஸ்.நிகாமை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ என்பன உட்பட 9 கோரிக்கைகளை முன்வைத்து, இளநிலை மருத்துவர்கள் 6 பேர் கடந்த 5-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளநிலை மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 50க்கும் அதிகமான மூத்த மருத்துவர்கள் அண்மையில் தங்களது பணியை ராஜினாமா செய்தனர். அவர்களை மருத்துவ மாணவர்கள் உற்சாகமாக கைதட்டி கரகோஷம் எழுப்பி வரவேற்றனர். இந்த காணொளி இணையத்தில் வைரலாகியது. மூத்த மருத்துவர்களின் இந்த ராஜினாமா நாடு முழுவதும் பேசு பொருளாகியது.

இந்நிலையில் நீதி வேண்டி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை (அக். 15) நாடு தழுவிய ஒரு நாள் உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐ.எம்.ஏ) அறிவித்துள்ளது. மேலும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்றும் மருத்துவர்களின் கோரிக்கையை மேற்கு வங்க அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்திய மருத்துவ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.