விஜய்க்கு எதிராக காய் நகர்த்துகிறாரா..? சந்தேகம் எழுப்பும் சீமான்-ரஜினி சந்திப்பு
நடிகர் ரஜினியை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் வரும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அதிமுக, திமுக, பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் மும்முரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியை ஆரம்பித்து 2026-ஆம் ஆண்டு தேர்தல் தான் நமது இலக்கு என்று தனது தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், விக்கிரவாண்டியில் தங்களது கட்சியின் முதல் மாநாட்டை நடத்தினார். இந்த மாநாடு தமிழகத்தில் முன்னணி கட்சிகள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பேசுப்பொருளாகவும் மாறியது. தொடர்ந்து, மாநாட்டின் போது நடிகர் விஜய் ’திராவிடமும், தமிழ் தேசியமும்’ தனது இரண்டு கண்கள் என்று கூறியதை சீமான் கடுமையாக விமர்சித்தார்.
அதற்கு முன்பு வரை விஜய்யின் அரசியல் வருகைக்கு ஆதரவு தெரிவித்த சீமான், மாநாட்டிற்கு பின் அவரை விமர்சித்து பேசியது சமூக வலைதளத்தில் பேசுப்பொருளானது. மேலும், விஜய்யுடன், நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைக்கும் என்ற எண்ணங்களும் தகந்தன. இதையடுத்து, தவெக கட்சி தொண்டர்களும், நாம் தமிழர் கட்சி தொண்டர்களும் சமூக வலைதளத்தில் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்திதுள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த சந்திப்பின் போது, தமிழக அரசியல் களம் குறித்து இருவரும் பல மணிநேரம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2-ஆம் தேதி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினியை சந்திக்க அனுமதி கேட்டிருந்ததாகவும், ஆனால் பல்வேறு காரணங்கள் இந்த சந்திப்பு தள்ளிப்போனதாகவும் கூறப்படுகிறது. சீமான்-ரஜினியின் இந்த திடீர் சந்திப்பு நெட்டிசன்கள் மத்தியில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவேளை சீமான், விஜய்க்கு எதிராக காய் நகர்த்துவதற்காக ரஜினியை சந்தித்தாரா? இந்த சந்திப்பின் போது ரஜினியின் ஆதரவை சீமான் கேட்டிருப்பாரோ? என ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியும் பாஜகவிற்கு ஆதரவு தெரிவிக்காத ரஜினி, எப்படி சீமானுக்காக ஆதரவு தெரிவிப்பார் என மற்றொரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
What's Your Reaction?