Air Show 2024: மெரினா கோர சம்பவம்... அரசின் அலட்சியத்தால் விளைந்த படுகொலை... சீமான் கண்டனம்!

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்படை வீர தீர நிகழ்ச்சியில் ஐந்து பேர் உயிரிழந்திருப்பது, அரசின் அலட்சியத்தால் விளைந்த படுகொலை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Oct 7, 2024 - 23:29
 0
Air Show 2024: மெரினா கோர சம்பவம்... அரசின் அலட்சியத்தால் விளைந்த படுகொலை... சீமான் கண்டனம்!
வான் சாகச நிகழ்ச்சி - சீமான் கண்டனம்

சென்னை: இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, மெரினாவில் பிரம்மாண்டமான வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பார்த்து ரசித்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து வான் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள், தமிழக அரசு முறையான ஏற்பாடுகள் செய்யவில்லை என குற்றம்சாட்டியிருந்தனர். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சீமான், தமிழக அரசுக்கு தனது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். அதில், இந்திய வான்படையின் 92வது தொடக்க நாள் நிகழ்வையொட்டி, சென்னை மெரினாவில் வான்படையின் வீர தீர செயல் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கியும் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டும் ஐந்து பேர் உயிரிழந்திருக்கிற செய்தி பேரதிர்ச்சி தருகிறது. இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சையிலிருப்பதும், வீர தீர நிகழ்ச்சி ஐந்து உயிர்களின் பேரிழப்போடு நிறைவுபெற்றிருப்பதும் பெரும் வேதனையைத் தருகிறது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன். 

15 இலட்சம் பார்வையாளர்களை வரவழைத்து, அதிகப்படியாகப் பார்க்கப்பட்ட வான்படை வீர தீர நிகழ்ச்சியாக லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதை இலக்காகக் கொண்டு இது நடத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்நிகழ்வில் அவ்வளவு இலட்சம் பேருக்கான முன்னேற்பாட்டை செய்யாத மாநிலத்தை, ஆளும் திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே ஐந்து பேரின் உயிரிழப்புகளுக்கும் காரணமாக அமைந்திருக்கிறது. ஓரிடத்திலே இத்தனை இலட்சத்துக்கும் மேலான மக்கள் கூடினால், அங்கு ஏற்பாடு செய்ய வேண்டிய இலவசக் குடிநீர், கழிவறை வசதிகள், முதியோர், பெண்கள், குழந்தைகளுக்கான குடில்கள், போக்குவரத்து ஒழுங்கு, மருத்துவ ஏற்பாடுகள், போதிய மீட்புக்குழுக்கள், காவல்துறையினர் உள்ளிட்ட எல்லா ஏற்பாடுகளும் சரிவர அமைக்கப்பட்டு, நிர்வகிக்கப்படாததே மக்களைப் பெரும் இன்னலுக்கு ஆளாக்கி, ஐந்து உயிர்களைப் போக்கியிருக்கிறது.

ஒரு அரசியல் கட்சியின் மாநாட்டுக்கும் பொதுக்கூட்டத்துக்கும் ஏகப்பட்ட நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்து, கெடுபிடி செய்யும் ஆட்சியாளர்கள், கடற்கரையில் 15 இலட்சம் பேரை எந்த அடிப்படையில் கூடவிட்டார்கள். இந்த அடிப்படைக் கேள்விக்கு என்னப் பதிலுண்டு? ஒக்கி புயலில் சிக்குண்டு எங்கள் மீனவச் சொந்தங்கள் நடுக்கடலில் தத்தளித்தபோது வராத வான்படை, குரங்கணி காட்டுத் தீவிபத்தில் மாட்டிக்கொண்ட எங்கள் பிள்ளைகளை மீட்க வராத உலங்கு ஊர்திகள், இப்போது கடற்கரையில் வேடிக்கைக் காட்டுவதன் மூலம் தமிழினத்திற்கு கிடைக்கப் போகும் நன்மை என்ன.? கடந்த 29ம் தேதி அன்று வான்படை துணைத் தளபதி ஊடகத்தினரிடம் 15 இலட்சம் மக்களை எதிர்பார்க்கிறோம் என்றும் அதற்கான ஏற்பாடுகளை அரசுடன் இணைந்து செய்யவிருக்கிறோம் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாக வந்துவிட்டது என்று இன்று திசை திருப்புவதன் காரணம் என்ன?

‘திராவிட மாடல்’ என தற்பெருமை பேசும் திமுகவின் ஆட்சியில் கொலைகள், கொள்ளைகள், வன்முறைத் தாக்குதல்கள், போதைப் பொருட்களின் மிதமிஞ்சியப் புழக்கம், வரைமுறையற்ற மது, கள்ளச் சாராயம் என சட்டம்-ஒழுங்கு ஒருபக்கம் சந்தி சிரிக்கையில், மறுபக்கம், மக்கள் ஒன்று கூடும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்வைக்கூட உயிரிழப்பு இல்லாது நடத்த வக்கற்று அரசின் நிர்வாகம் தறிகெட்டு நிற்கிறது. விடுமுறை நாளில் மனமகிழ்வடைய கேளிக்கைக்காக கடற்கரைக்குச் சென்ற பொதுமக்கள், பிணமாய் வீடு திரும்புவதென்பது ஏற்கவே முடியாதப் பேரவலம்; சகிக்கவே முடியாத பெருங்கொடுமை. மொத்தத்தில், ஐந்து பேரின் மரணமென்பது ஆளும் திமுக அரசின் அலட்சியத்தில் விளைந்த படுகொலையாகும். நாடு தழுவிய அளவில் கவனம்பெறும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வைக்கூட சரிவர ஒருங்கிணைத்து நடத்தத் தவறிய ஆளும் திமுக அரசுக்கு என்னுடைய வன்மையானக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow