ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள இளங்குன்றம் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பாண்டி முனீஸ்வரர் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து பக்தர்களின் மனதை மகிழ்விக்கும் வகையில் இரவு பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று இளங்குன்றம் கிராமத்தின் அருகே உள்ள மஞ்சுவிரட்டு மைதானத்தில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி கிராமத்தார்களால் ஏற்பாடு செய்யப்பட்டு வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமல்லாமல் மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்தும், உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு பார்வையாளர்களை பரவசப்படுத்தின.
மஞ்சுவிரட்டு போட்டியைக் காண அப்பகுதியைச் சேர்ந்த ஏராளாமான பொதுமக்கள் கலந்து கொண்டு மஞ்சுவிரட்டை கண்டு களித்தனர். மேலும் அப்பகுதியில் மக்கள் திரளாக கூடியதால், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.