வெள்ளத்தில் தத்தளிக்கும் தூங்கா நகரம்... தண்ணீரை வெளியேற்ற போராடும் அமைச்சர்கள்!

மதுரையில் பல்வேறு இடங்களில் சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்கு இன்னும் 3 நாட்கள் ஆகும் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

Oct 26, 2024 - 15:12
 0
வெள்ளத்தில் தத்தளிக்கும் தூங்கா நகரம்... தண்ணீரை வெளியேற்ற போராடும் அமைச்சர்கள்!
வெள்ளத்தில் தத்தளிக்கும் தூங்கா நகரம்... தண்ணீரை வெளியேற்ற போராடும் அமைச்சர்கள்!

தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. அதன்படி மதுரையில் நேற்று (அக். 25) காலை முதல் மாலை வரை விடாமல் கனமழை பெய்ததால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். நேற்று மாலை 3 மணியிலிருந்து 3:15 மணி வரை அதாவது வெறும் 15 நிமிடங்களில் மதுரையில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது. கால்வாய்கள் சரியாகப் பராமரிக்கப்படாததே மழை நீர் தேங்கக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறனர்.

இந்த சூழலில் மதுரையில் மழை நீர் தேங்கிய பகுதிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பேரிடர் மீட்புப் படைகளை உடனடியாக அனுப்பி வைத்தார். மேலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று இரவு அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மதுரை மாவட்ட பேரிடர் கண்காணிப்பாளர் அருண் தம்புராஜ், மதுரை ஆட்சியர் சங்கீதா, மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் மற்றும் மேயர் ஆகியோரை மழை நீர் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளும்படி அறிவுருத்தினார். மதுரை வைகை ஆற்றில் தொடர்ச்சியாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பல்வேறு கண்மாய்களில் இருந்து கால்வாய் மூலம் வைகை ஆற்றங்கரைக்கு திருப்பிவிடப்பட்ட தண்ணீர் குறித்தும், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் இடத்தில் வெளியேறும் தண்ணீரின் அளவு குறித்தும் அமைச்சர்களும் அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்கள், “மதுரையில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் தற்போது வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விவசாயத்திற்காக திறந்து விடப்பட்டு தண்ணீர் சூழ்ந்து தற்போது கண்மாய்கள் முழுவதும் நிரம்பிவிட்டது. தற்போது இந்த தண்ணீர் ஆற்றுப்பகுதிக்கு திருப்பிவிடப்பட்டிருக்கிறது. குடியிருப்புக்குள் சூழ்ந்துள்ள தண்ணீரை அகற்றுவதற்கு தொடர்ச்சியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும்,  மதுரையில் சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்கு குறைந்தது இன்னும் மூன்று நாட்கள் ஆகும். பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று நூற்றுக்கும் மேற்பட்டவர்களை தற்போது தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow