ஆதியோகியை தரிசிக்கும் பலருக்கும் எழும் கேள்வி, ஏன் 112 அடி உயரம் என்பது தான். தோராயமாக 15,000 ஆண்டுகளுக்கு முன்பு உலகில் மதம் என்ற ஒரு கட்டமைப்போ, கருத்தியலோ இல்லாத காலத்தில் ஆதிகுருவான சிவன் உலகிற்கு முதன்முதலில் யோக கலையை வழங்கினார். அவரே முதல் யோகியும் ஆவார். ஆகையால் இந்த உலகின் முதல் யோகி அதாவது ‘ஆதியோகி’ என அவர் அழைக்கப்படுகிறார்.
அகத்தியர் உள்ளிட்ட 7 சப்த ரிஷிகளுக்கு முக்தி எனும் விடுதலைக்கான 112 வழிமுறைகளை ஆதியோகி வழங்கினார்.
இந்த அடிப்படையில், ஈஷா யோக மையத்தில் பிரம்மாண்டமாக ஆதியோகியின் திருவுருவம் 112 அடி கொண்டதாக அமைக்கப்பட்டது. மேலும் 500 டன் எடையுள்ள ஆதியோகியின் திருவுருவம், கின்னஸ் புத்தகத்தால் ‘உலகின் மிகப்பெரிய மார்பளவு சிற்பம்’ என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பம் சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்டது.
ஆதியோகியின் திருவுருவத்தை வடிவமைக்கையில் ஏன் 112 அடியை நிர்ணயித்தார்கள் என்ற கேள்வியும் எழும். மனிதர்கள் முக்தி நிலையை 112 வழிகளில் அடைய முடியும் என்கிற சாத்தியத்தை உணர்த்தவும், மனித உடலில் உள்ள 112 சக்கரங்களை குறிக்கும் விதமாகவும் ஆதியோகியின் திருவுருவம் 112 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆதியோகி அமைந்திருக்கும் இடத்தின் மற்றொரு சிறப்பம்சமாக அங்கு யோகேஸ்வர லிங்கம் 5 சக்கரங்களை கொண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. யோகேஸ்வர லிங்கத்தின் அருளை உள்வாங்க ஏதுவாய் பக்தர்கள் அவருக்கு நீரும், வேப்பிலையும் அர்ப்பணித்து வழிபடுகின்றனர்.
மேலும் இந்திய சுற்றுலா அமைச்சகம், அதன் அதிகாரப்பூர்வ, ‘இன்கிரிடிபிள் இந்தியா’ பிரச்சாரத்தின் கீழ் ஆதியோகியையும் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.