வருகின்ற 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள த.வெ.க மாநாடு மழையால் தடை படுவதற்க்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் கிரித்திகா தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவங்களுக்கான மழைப்பொழிவு அடுத்தடுத்த நாட்களில் எவ்வாறு இருக்கும் என்பதை தனியார் வானிலை ஆய்வாளர் கிரித்திகா குமுதம் செய்திகளுக்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், “இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு முழுவதும் 440 மில்லி மீட்டர் மழை பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 15, 16, 17 ஆகிய மூன்று நாட்களில் 300 மில்லி மீட்டருக்கும் மேலாக மழை பதிவாகியுள்ளது. வரும் 22ஆம் தேதி மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி தமிழ்நாட்டில் உள்ள வட மாவட்டங்களுக்கு மழைப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தாண்டு வரும் டிசம்பர் மாதத்திற்குள் சைக்ளோன் [புயல் சின்னம்] உருவாக வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த 16, 17 ஆகிய தினங்களில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டும், மழை பொழிவு குறைவாகவே இருந்தது. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட 440 மில்லி மீட்டர் அளவில் 300 மில்லி மீட்டர் ஒரே நாளில் மழை பொழிந்து முடித்து விட்டது.
வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் நவம்பர் மாதத்திலேயே இந்த ஆண்டுக்கான பெருமழை எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 22ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் மிதமான மழைக்கே வாய்ப்புள்ளது. 22ஆம் தேதிக்கு பிறகு வட மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
வரும் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள த.வெ.க மாநாடு மழையால் தடைபட வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இதற்குக் காரணம் இம்மாதம் எதிர்பார்க்கப்பட்ட மழை, வருகின்ற 25ஆம் தேதிக்குள் முழுவதுமாக பெய்து முடிந்துவிடும். 25ஆம் தேதிக்கு பிறகு தீபாவளி நாட்களில் தமிழ்நாட்டில் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இருக்காது. ஆகையால் வரும் 27ஆம் தேதி த.வெ.க மாநாடு மழையால் தடை படுவதற்க்கான வாய்ப்பு குறைவாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.