கனகசபை விவகாரம் - தீட்சிதர்களுக்கு கால அவகாசம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில், கனகசபை மீது நின்று பக்தர்கள் வழிபடுவது தொடர்பான திட்டத்தை தாக்கல் செய்ய, பொது தீட்சிதர்கள் தரப்பினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் டிசம்பர் 12ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது.

Nov 29, 2024 - 09:08
 0
கனகசபை விவகாரம் - தீட்சிதர்களுக்கு கால அவகாசம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்வது தொடர்பான திட்டத்தை தாக்கல் செய்ய, பொது தீட்சிதர்கள் தரப்பினருக்கு டிசம்பர் 12ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய எந்தெந்த நேரத்தில் அனுமதிக்கப்படுவர், என்ன நடைமுறை பின்பற்றப்படும் என்பது குறித்த திட்டத்தை தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை பதிவு செய்த உயர் நீதிமன்றம், திட்டத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்குகள், நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, கனகசபை தரிசனம் தொடர்பான திட்டத்தை தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.

மற்றொரு மனுதாரர் தரப்பில், வாதங்களை முன் வைக்க அனுமதி கோரப்பட்டது. கனகசபையில் பக்தர்கள் தரிசனத்தை கோவிலை நிர்வகிக்கும் பொது தீட்சிதர்கள் முறைப்படுத்த வேண்டும், அல்லது, அறநிலையத் துறை முறைப்படுத்த வேண்டும். இதுசம்பந்தமான திட்டம் வகுக்கப்பட்டால் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டு விடும் எனக் கூறிய நீதிபதிகள், கனகசபை தரிசனம் தொடர்பான திட்டத்தை சமர்ப்பிக்க பொது தீட்சிதர்கள் தரப்புக்கு டிசம்பர் 12ம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow