திரைத்துறையின் பேராளுமை! கலைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! - கமல்ஹாசனுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து!
இந்தியத் திரையுலகின் தனித்துவம்... தமிழ் சினிமாவின் பெருமிதம்... ரசிகர்கள் கொண்டாடும் உலக நாயகன் கமல்ஹாசனின் 70வது பிறந்தநாள் இன்று. இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
“பிறக்கின்ற புதுமைகளுக்கெல்லாம் இந்தியத் திரையுலகின் வாயிற்கதவுகளைத் திறக்கின்ற கலைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
திரைக்களம் தொடங்கி அரசியல் களம் வரை முற்போக்கு - பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புரை செய்யும் அருமை நண்பர் கமல்ஹாசனின் தொண்டு சிறக்க விழைகிறேன்!” என முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.
“முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கலைஞானி என போற்றப்பட்ட திரையுலகின் பேராளுமை.
கழகத்தலைவர் அவர்களின் அன்பு நண்பராக – கழகத்தோடு கரம் கோத்து ஓரணியாய் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் முற்போக்கு முகம்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் உலகநாயகன் கமல்ஹாசன் சாருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மதவாத - பிளவுவாத அரசியலை சரியான தளத்தில் நின்று எதிர்த்து வரும் கமல் சாரின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்!” என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.
“திரைக்கலை மீது கொண்டிருக்கும் அளப்பெரும் காதலால் புதுமையான முயற்சிகளையும், நவீன மாற்றங்களையும் புகுத்தி, தமிழ்த்திரையுலகைப் பன்னாட்டுத்தரத்திற்கு எடுத்துச் சென்ற ஆகச்சிறந்த திரைக்கலைஞர்!
நடிப்பின் பேரிலக்கணமாய் திகழ்ந்து, வருங்கால தலைமுறையினருக்கு வழிகாட்டும் பல்கலைக்கழகமாய் விளங்கும் கலைத்துறையின் பேராசான்!
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடனக்கலைஞர், திரைக்கதை எழுத்தாளர், உரையாடல் ஆசிரியர், பாடலாசிரியர், பாடகர் எனப் பன்முகத்திறன் கொண்ட மகத்தான படைப்பாளி!
இந்நூற்றாண்டின் ஈடுஇணையற்ற பெருங்கலைஞர்! திரைத்துறையின் பேராளுமை!
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் பேரன்பிற்கினிய அண்ணன் கலைஞானி கமல்ஹாசன் அவர்களுக்கு அன்பு நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்தியுள்ளார்.
“மக்கள் நீதிமையம் கட்சியின் நிறுவனத் தலைவர் கமலஹாசன் அவர்களுக்கு எனது உளமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் அரசியலிலும், திரைத்துறையிலும் சாதிக்க எனது வாழ்த்துகள்!” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்தியுள்ளார்.
”சிறந்த நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான திரு கமல்ஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்” என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வாழ்த்தியுள்ளார்.
What's Your Reaction?