விஜய்யின் தவெக மாநாட்டிற்கு சென்றவர்கள் யார், யார்? முழு வீச்சில் களமிறங்கும் உளவுத்துறை
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு சென்றவர்கள் யார்- யார்? என்ற பட்டியலை சேகரிக்கும் பணியில் உளவுத்துறை போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த அக்டோபர் 27ஆம் மாதம் நடந்து முடிந்தது. நடிகரும், அதன் கட்சியின் தலைவருமான விஜய் மாநாட்டில் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. விஜய் அரசியல் மாநாட்டால் அரசியல் அரங்கில் பல்வேறு சலசலப்புகளும் ஏற்பட்டுள்ளது.
முக்கியமாக திமுக தான் அரசியலில் தனது பிரதான எதிரி என்றும், திராவிட மாடல், பாசிசம் என்று கூறி திமுக மக்களை ஏமாற்றி வருவதாகவும் மாநாட்டின் கன்னிப் பேச்சிலேயே விஜய் பகிரங்கமாக தெரிவித்து இருந்தார். ஒருவேளை விஜய் அதிமுகவுடன் அல்லது நாதகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், நேற்று, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்து அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
அடுத்தக்கட்டமாக விஜய் அரசியல் நகர்வுகளை அதிரடியாக எடுத்து வைக்க உள்ளார் என கூறப்படுகிறது. கட்சியின் உறுப்பினர்கள் சேர்க்கை, ஒவ்வொரு மாவட்டங்களிலும் கூட்டம் நடத்தி கட்சி பலப்படுத்த திட்டமிடப்ட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் விஜய்யோடு அரசியல் நகர்வுகளை உளவுத்துறை தீவிரமாக உற்று நோக்கி வருகிறது. விஜய் கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் பின்னணி என்ன? யார் யாரெல்லாம் விஜய்க்கு அரசியல் கட்சியின் வளர்ச்சிக்கு உதவி புரிகிறார்கள்? அடுத்து விஜய் என்னென்ன செய்யப்போகிறார்? என்பது குறித்த தகவல்களை சேகரிப்பதில் உளவுத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக மாநாட்டிற்கு கலந்துகொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள், முக்கிய உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் பட்டியலை சேகரிக்கும் பணியில் உளவுத்துறை போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து சென்னை உள்ளிட்ட தமிழக முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்களை தொடர்பு கொண்டு உளவுத்துறை விவரங்களை சேகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் மாநகராட்சி வார்டுகள் வாரியாக நிர்வாகிகளின் பட்டியல், பின்னணி குறித்த விவரங்களை உளவுத்துறை போலீசார் தயார் செய்து விட்டதாக கூறப்படுகிறது.
மேலும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்றவர்களின் வயது, முகவரி, மற்ற கட்சியின் உறுப்பினர்களா? சொந்த ஊர் எது? அவரது குடும்பத்தினர் வேற கட்சியில் உள்ளார்களா? உள்ளிட்ட பல்வேறு விவரங்களும் சேகரிக்கும் பணியில் உளவுத்துறை போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
What's Your Reaction?