ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தது ஏன்?.. எச்.ராஜா விளக்கம்!

''பாஜகவில் ஆறு ஆண்டுக்கு ஒருமுறை கட்சி உறுப்பினர்கள் பணியை புதுப்பிப்பார்கள் அகில இந்திய அளவில் ஒரு பூத்துக்கு 200 பேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு கோடி பேரை சேர்ப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது'' என்று எச்.ராஜா கூறியுள்ளார்.

Sep 1, 2024 - 17:20
Sep 2, 2024 - 10:09
 0
ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தது ஏன்?.. எச்.ராஜா விளக்கம்!
RN Ravi And H Raja

சென்னை: தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உயர்படிப்புக்காக லண்டன் சென்றுள்ள நிலையில், தமிழ்நாடு பாஜகவில் மூத்த தலைவர் எச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒருங்கிணைப்பாளராக பதவியேற்ற எச்.ராஜா, சென்னையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா கூறுகையில், ''மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்தித்து பேசினேன். ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். ஊழல் தடுப்பு சட்டத்தில் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது.
முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது செந்தில் பாலாஜி ஊழல் குற்றவாளி என்று சான்றிதழ் கொடுத்திருந்தார். திமுக ஆட்சிக்கு வந்தால் செந்தில் பாலாஜி சிறை செல்வார் என ஸ்டாலின் கூறியிருந்தார். இப்போது அதுவே நடந்துள்ளது. 

பாஜகவில் ஆறு ஆண்டுக்கு ஒருமுறை கட்சி உறுப்பினர்கள் பணியை புதுப்பிப்பார்கள் அகில இந்திய அளவில் ஒரு பூத்துக்கு 200 பேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு கோடி பேரை சேர்ப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஒன்றிய, நகராட்சி அனைத்து நிர்வாகிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி உறுப்பினர் காலத்தை புதுப்பிக்க உள்ளார்.

மக்களை பாதிக்கும் விஷயங்களை தொடர்ந்து அரசிடம் எடுத்துக்கூறுவோம். தேவைப்பட்டால் போராட்டமும் நடத்துவோம். திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்ததை விட தற்பொழுது அதிக திட்டங்களை மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுத்துள்ளது. ரயில்வே பட்ஜெட்டில் 6,000 கோடிக்கு மேல் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த நிதிநிலை அறிக்கையில் நிரந்தர முதலீட்டுக்கு எவ்வளவு தொகையை ஒதுக்கி உள்ளது என்பதற்கான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். பாஜகவை கார்ப்பரேட் நிறுவனம் என நண்பர் எடப்பாடி  பழனிசாமி விமர்சித்துள்ளார். பாஜகவில் கட்சி துவங்கியது முதல் நான் பதவியில் இல்லை என கூறினார்கள். 35 ஆண்டுகளாக நான் உறுப்பினராக இருந்த நான் இன்று கட்சியை வழிநடத்தக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறேன்.

பல அதிமுக அமைச்சர்கள் அரசியலில் வருவதற்கு முன்பாகவே ஆரம்பித்த கட்சியில் நான் இருக்கிறேன். ஆகையால் அதிமுக பேச வேண்டும் என்பதற்காக எதையாவது பேசக்கூடாது'' என்றார். சென்னையில் நடைபெறும் கார் பந்தயம் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த எச்.ராஜா, ''கார் பந்தயம் நடந்து வரும் நிலையில், அது குறித்து ஏதும் கருத்து தெரிவிக்கக் கூடாது. கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு வாழ்த்துகள்'' என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow