தமிழ்நாடு

பச்சைக்கிளிகள் தோளோடு.. 3 தலைமுறை ஒன்றுகூடிய நிகழ்ச்சி மதுரையை கலக்கிய குடும்பம்!

Usilampatti Family Function : உசிலம்பட்டியில் தமிழ்நாட்டின் பல பகுதியில் தனித் தனியாக பிரிந்திருந்த குடும்பத்தை ஒன்றிணைப்பதற்காகவே பிரத்யேகமாக ஒரு விழாவை கொண்டாடியுள்ளது ஒரு குடும்பம். மூன்று தலைமுறையினர் இணையும் விழா என்ற தலைப்பில் நடந்த இந்த விழாவில் சுமார் 240 குடும்பங்கள் ஒன்றிணைந்து அன்பை பரிமாறிக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பச்சைக்கிளிகள் தோளோடு.. 3 தலைமுறை ஒன்றுகூடிய நிகழ்ச்சி மதுரையை கலக்கிய குடும்பம்!
பச்சைக்கிளிகள் தோளோடு.. 3 தலைமுறை ஒன்றுகூடிய நிகழ்ச்சி மதுரையை கலக்கிய குடும்பம்!

Usilampatti Family Function : சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன் படத்தில், தன் பேரன் பேத்திகளை ஊருக்கு வரவழைப்பதற்காக தாத்தா கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் உயிரிழந்தது போல் நாடகமாடி அனைவரையும் வரவழைத்திருப்பார். அது போன்ற ஒரு ருசீகர சம்பவம்  உசிலம்பட்டியிலும் அரங்கேறியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர்கள் சட்டமுத்து மற்றும் அடஞ்சாரம்மாள் தம்பதி. இந்த தம்பதிக்கு 5 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகள் பிறந்தன. இவர்கள் பெற்ற பிள்ளைகள், அவர்களை மணந்தவர்கள், அவர்கள் பெற்ற பிள்ளைகள் என இந்த தம்பதியின் வழியாக வந்த சொந்தங்கள் மட்டும் 240 குடும்பங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், காலம் போக போக இந்த சொந்தங்கள் ஆங்காங்கே பிரிந்து இருந்துள்ளனர். ஏதாவது ஒரு இல்ல விழாக்களில் மட்டுமே சொந்தங்கள் சிலர் மட்டுமே பங்கேற்றும் வந்துள்ளனர். இதனால், இந்த 240 குடும்பத்தினரையும் ஒருங்கிணைத்து கூட்டு குடும்பத்தின் பெருமையை எடுத்துக் கூற  இவர்களின் வாரிசுகளில் ஒருவரான பாண்டி என்பவர் எண்ணியுள்ளார். இதற்காக, தமிழ்நாடெங்கும் படர்ந்து வாழ்ந்து வரும் இவர்களது சொந்தங்களை கண்டுபிடித்து, தேடி சென்று, பத்திரிக்கை வைத்து கடைசி மூன்று தலைமுறையினர் இணையும் விழாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அவ்வாறு இன்று உசிலம்பட்டியில் உள்ள ஒரு மண்டபத்தில் இந்த 240 குடும்பத்தினர் சந்தித்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் சட்டமுத்து - அடஞ்சாரம்மாள் தம்பதியின் மகன், மகள் வழிவழியாக வந்த சுமார் 3 தலைமுறையைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்று அன்பை பகிர்ந்து கொண்டது விழா ஏற்பாட்டாளர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பாட்டன், பூட்டன், பேரன், பேத்தி என அனைத்து உறவுகளையும் ஒரே இடத்தில் சந்தித்த இந்த நிகழ்ச்சி குறித்து முருகன் என்பவர் பேசுகையில், “தமிழகத்திலேயே இப்படி ஒரு நிகழ்வு முதன்முறையாக  நடந்திருக்கிறது என எண்ணுகிறோம். ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை இதுபோல உறவினர்களை சந்தித்து அன்பை பகிர்ந்து கொள்ளும் நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளோம்”, என அவர் தெரிவித்தனர்.,

தாத்தா பெயரை கூட தெரிந்துக்கொள்ளாமல், தனி குடும்பங்களாக வாழும் வழக்கத்திற்கு பழகிப்போயுள்ள பல குடும்பங்களுக்கு உசிலம்பட்டியை சேர்ந்த இந்த குடும்பம் நடத்திய இந்த விழா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றால் மிகையாகாது.