“திமுக பிடிக்கலையா? அப்போ எங்க கிட்ட வாங்க... ஆட்சியை நாம புடிப்போம்...” - ஜெயக்குமார்
எந்த ஒரு கூட்டணி பேச்சுவார்த்தையும் நடைபெறாமல், பத்திரிக்கையில் வந்த செய்தியின் அடிப்படையில் தவெக மறுப்பு தெரிவித்துள்ளார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
16வது மத்திய நிதி ஆணைய ஆலோசனை கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. அரசியல் கட்சிகளுடன் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு கட்சியின் கோரிக்கைகளை மனுவாக அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் அரசுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மத்திய அரசு வசூலிக்கும் வரியில் சரி சமமாக சமச்சீராக மாநிலங்களுக்கு பங்களிக்க வேண்டும். 100 ரூபாய்க்கு 59 ரூபாயை மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது. மீதமுள்ள 41 ரூபாயை மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்கிறது. மத்திய அரசிற்கு நிதி ஆதாரத்தை பெருக்க பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் மாநிலத்திற்கு அவ்வாறு இல்லை. காவல்துறை உள்ளாட்சித் துறை பேரிடர் காலம் என பல்வேறு கடமைகள் உள்ளன. பிரிக்கப்படும் 41% நிதியிலும் ஒரு புறம் சுண்ணாம்பு, மறு புறம் வெண்ணை என்பது போல் உத்திரபிரதேசத்திற்கு அதிகமாகவும் தமிழகத்திற்கு குறைவாகவும் பிரிக்கப்படுகிறது. எனவே 50% ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அதிமுக சார்பில் கோரிக்கை வைத்துள்ளோம்.
கடந்த கால மத்திய நிதி ஆணையங்கள் அமைக்கப்பட்டபோது மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தது திமுக. காங்கிரஸ், பாஜக என இரண்டு கட்சிகளுடனும் கூட்டணியில் இருந்தனர். மாநில பட்டியலில் இருந்த கல்வியை, இந்திரா காந்தி பொது பட்டியலுக்கு மாற்றிய பிறகு 17 ஆண்டுகள் காங்கிரஸ் உடன் கூட்டணி இருந்தீர்கள். ஏன் அந்த காலகட்டத்தை பயன்படுத்தி மீண்டும் மாநில பட்டியலுக்கு கல்வியை கொண்டு வரவில்லை? செய்யும் இடத்திலிருந்து திமுக எதையுமே செய்யவில்லை. எல் போர்டு அரசாங்கமாகவே இருந்து வருகிறது. மேலும் அதே 17 ஆண்டில் மத்தியில் கூட்டணியில் இருந்த திமுக மாநில நிதி பங்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த ஏன் முயற்சி எடுக்கவில்லை? திமுகவை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை எண்ணத்துடன் எங்கள் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி வைக்க உள்ளோம்.
திமுகவை அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்டவர்கள் யாராக இருந்தாலும் அதிமுக தலைமையை ஏற்றுக் கொண்டு கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம் என்று எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கூறியுள்ளார். எந்த ஒரு கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறாமல், பத்திரிக்கையில் வந்த செய்தியின் அடிப்படையில் தவெக மறுப்பு தெரிவித்துள்ளார்கள். ஆட்சியில் திமுகவை அகற்ற வேண்டுமென்ற எண்ணம் கொண்ட கட்சிகள் எல்லாம் எங்களிடம்தான் வரவேண்டும். It's not an appropriate time. கூட்டணி குறித்து பேச இது உகந்த நேரமில்லை. எங்களுடன் யார் கூட்டணிக்கு வர வேண்டும், யாரை கூட்டணியில் சேர்ப்பது எல்லாம் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார். நீட் ரகசியத்தை உதயநிதி எப்போது சொல்ல போகிறாரரோ அப்போதே அந்த ‘சேக்கிழ’ ராமாயணத்தை நாங்கள் தருகிறோம். ஜனவரி 15 ம் தேதி சுதந்திர தினம் என மு.க.ஸ்டாலின் சொல்கிறார். அந்த ரகசியத்தை அவர்கள் கூறட்டும் பின்னர் நாங்கள் சொல்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?