இலங்கையில் நடைபெற்ற தந்தை பெரியார் சிலை நிறுவுவது குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேசும் போது "தற்போது தமிழக அரசியல் சூழலில் பெரியார் குறித்த விமர்சனங்களும்,விவாதங்களும் உருவாகி இருக்கும் நிலையில், இலங்கை பயணத்தில் இருக்கும் நான் பெரியாரின் கருத்துக்கள் இந்த மண்ணிற்கும் அவசியமானது என்பதை உணர்கிறேன்.
அது தொடர்பாக இங்கு இருக்கும் சமூக ஆர்வலர்கள், சிந்தனையாளர்களை ஒருங்கிணைத்து ஆலோசனை செய்ததன் பேரில் இங்கு யாழ்பாணத்தில் ஒரு பெரியார் சிலை நிறுவுவது என்று முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது.
லெனின், காரல் மார்க்ஸ், பாரதியார், காந்தியடிகள் என்று பல்வேறு தலைவர்களுக்கும் இங்கே சிலைகள் நிறுவப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் பெரியாருடைய அவரது சமூக நீதி கருத்துக்களை ஈழத்து மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் நிறுவப்படும் முதல் சிலையாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது "என்று பல்வேறு கருத்துக்களை முன்வைத்து பரபரப்பாக பேசினார்.
‘விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை சீமான் சந்திக்கவே இல்லை. அவருடன் இருப்பது போல் படத்தை எடிட் செய்து கொடுத்ததே நான் தான்’ என்றும், இலங்கையில் தனி ஈழம் கேட்டு போரிட்ட பிரபாகரனுடன் இருப்பது போல் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு புகைப்படத்தை பயன்படுத்தி வருகிறார் என்று, சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த சினிமா இயக்குநர் ராஜ்குமார் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து, பிரபாகரனுடன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இருக்கும் புகைப்படத்தை, கணிப்பொறி மென்பொருள் கொண்டு ஆராய்ந்ததில், அந்த புகைப்படம் பொய்யானது இல்லை; எடிட் செய்யப்பட்டது இல்லை என தெரிவிக்கிறது என பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தமைக்கு, கம்பியூட்டரில் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் செயல்முறை விளக்கமளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.