நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் காளியம்மாள். நாம் தமிழர் கட்சியில் பெண் தலைவர்களில் ஒருவராக உருவெடுத்ததோடு, 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் என அனைத்து தேர்தல்களில் களம் கண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
பல ஆண்டுகளாக நாதகவின் முக்கிய தலைவராக வலம் வந்த காளியம்மாள், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் தனக்கான தனி செல்வாக்கை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுப்பட்டதாகவும், அது ராவணன் குடில் வரை சென்றதால் காளியம்மாளை சீமான் இழிவாக விமர்சிக்கத் தொடங்கியதாகவும் கூறப்பட்டது.
கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு காளியம்மாளை ’பிசிறு’ என சீமான் இழிவாக பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக காளியம்மாள் எந்த ரியாக்ஷனும் தெரிவிக்காமல் சைலண்ட்டாக இருந்தார். இதனைத் தொடர்ந்து, காளியம்மாளை அநாகரீகமாக பேசியதாக வெளியான ஆடியோக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுக்கூட்டம் ஒன்றில் விளக்கம் அளித்திருந்தார். அந்த பேச்சும் காளியம்மாள் ஆதரவாளர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாகியது. இப்படி, சீமான் கடுமையாக விமர்சித்த ஆடியோ, மற்றும் அந்த ஆடியோவிற்காக கொடுத்த விளக்கம் என அப்செட்டில் இருந்த காளியம்மாள், அப்போது முதலே நாம் தமிழர் கட்சியில் ஒட்டியும் ஒட்டாமலுமே இருந்து வந்தார்.
இதனைத் தொடர்ந்து, பிரபாகரனை, சீமான் வெறும் 10 நிமிடங்கள் தான் சந்தித்தார் என நிகழ்ச்சி ஒன்றில், சீமான் முன் வரிசையில் அமர்ந்திருக்க காளியம்மாள் பேசி இருந்தார். இதற்கு அதே மேடையிலேயே சீமான் பதிலும் கொடுத்தது பெரும் சர்ச்சையான நிலையில், அதன் பின்னர் காளியம்மாள் நாம் தமிழர் கட்சி நடவடிக்கைகளில் இருந்து காளியம்மாள் முற்றிலுமாக விலகியிருந்தார்.
இதனிடையே, காளியம்மாள் ந.தா.க.-வில் இருந்து வெளியேறி விஜய்யின் த.வெ.க.-வில் இணையப் போவதாகவும், அதற்காக விஜய்யை அவர் சந்தித்து பேசிவிட்டதாகவும் தகவல் வெளியாகியது.
இந்தச் சூழலில் தான், அடுத்த மாதம் தூத்துக்குடி மணப்பாட்டில் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துக் கொள்ளவிருக்கும் உறவுகள் சங்கமம் எனும் நிகழ்வில் சமூக செயற்பாட்டாளராக பங்கேற்கிறார் காளியம்மாள் என்ற அறிவிப்பு வெளியானது. திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்கும் இந்த நிகழ்வில் நாதக காளியம்மாள் ஒரே மேடையை பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக காளியம்மாள் கூறுகையில், நாதக பொறுப்பை குறிப்பிடாமல் அழைப்பிதழ்களில் தனது பெயரை குறிப்பிடுமாறு தான் தான் கேட்டுக் கொண்டதாக குறிப்பிட்டு இருந்தார். விரைவிலேயே நாதக-வில் நீட்டிகிறேனா, விலகுகிறேனா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று காளியம்மாள் தெரிவித்தார்.
நா.த.க.வில் இருந்து விலகிய ஏராளமானோர் ஆளும் திமுக-வில் ஐக்கியமான நிலையில், காளியம்மாளும் அதே திராவிட மாடலின் பாதையில் பயணிக்க இருப்பதாக தகவல் வெளியானது. காளியம்மாள் தவெகவில் சேரும் ஐடியாவில் இருந்ததை ஸ்மெல் செய்த அறிவாலயம், நாகப்பட்டினம் பொறுப்பு அமைச்சரான அன்பில் மகேஷ் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அப்போது “எனக்கு ராஜ்யசபா சீட் கொடுத்தால், திமுகவில் இணையத் தயார்” என்று காளியம்மாள் டிமாண்ட் வைத்ததாக புருவங்களை உயர்த்துகின்றனர் உள் விவகாரங்களை அறிந்தவர்கள். காளியம்மாளின் டிமாண்டிற்கு அறிவாலயமும் ஓகே சொல்லிவிட்டதகாவும், எனவே ஸ்டாலின் பிறந்தநாளான மார்ச் 1 ஆம் தேதி அறிவாலயத்தில் காளியம்மாளின் இணைப்பு நிகழ்ச்சி அரங்கேறும் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவல்கள் உறுதிப்படுத்தப் படாமல் உலா வரும் நிலையில், நாதக-வில் இருந்து கணத்த இதயத்தோடு விலகுவதாக அறிவித்துள்ளார் காளியம்மாள். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆறு வருடங்களாக உயிராக எண்ணி வழிநடந்த நாம் தமிழர் கட்சி என்னும் பாதை இத்துடன் முடிவதாக கூறியுள்ளார். இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டதை எண்ணி மனம் வருந்துவதாக தெரிவித்துள்ள காளியம்மாள், என்றும் தமிழ்த் தேசியத்தை விதைக்கும் பணியில் பயணம் தொடரும் என்றும் கூறியுள்ளார்.
விலகல் அறிக்கையில் சீமானின் பெயரை எங்கும் குறிப்பிடாத காளியம்மாள், அவர் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டையோ, புகாரையோ முன்வைக்கவில்லை. இது விஜய் பாணி அரசியல் என்று கூறும் ஒருசிலர் அப்போ, காளியம்மாள் த.வெ.க.-வில் தான் இணையப் போகிறாரா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
ஓராண்டு காலமாகவே நாம் தமிழர் கட்சியில் ஒட்டியும், ஒட்டாமலும் பயணித்து வந்த காளியம்மாள் இறுதியாக அக்கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார்..... ஆனால் அவரது அடுத்த பயணம் திராவிட மாடல் வழியிலா... இல்லை திராவிடமும், தமிழ்த் தேசியமும் இம்மண்ணின் இருகண்கள் என்று கூறிய த.வெ.க. வழியிலா என்பது தான் அவருடைய நலன்விரும்பிகளின் கேள்வியாக உள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் நாம் தமிழர் கட்சிக்காக உரக்க குரல் கொடுத்து வந்த காளியம்மாளின் வண்டி பனையூர் செல்லுமா அல்லது அறிவாலயம் பக்கம் திரும்புமா என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்....