ஜானகி சௌந்தர் TO H. வினோத்... தல – தளபதி இருவரையும் இயக்கிய LUCKY டைரக்டர்ஸ் லிஸ்ட் இதோ!

தளபதி விஜய்யின் கோட் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றுள்ளது. அஜித்துக்கு மங்காத்தா மூலம் சூப்பர் ஹிட் கொடுத்த வெட்கட் பிரபு, விஜய்க்கும் அதேபோல் வெயிட்டான படத்தையே கொடுத்துள்ளதாக சினிமா விமர்சகர்கள் ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், தல – தளபதி இருவரையும் இயக்கிய இயக்குநர்கள் குறித்து ஒரு சிறிய தொகுப்பை இப்போது பார்ப்போம். 

Sep 5, 2024 - 11:06
Sep 5, 2024 - 17:35
 0
ஜானகி சௌந்தர் TO H. வினோத்... தல – தளபதி இருவரையும் இயக்கிய LUCKY டைரக்டர்ஸ் லிஸ்ட் இதோ!

தல, தளபதி இணைந்து முதலும் கடைசியுமாக நடித்தது 1995 ஆம் ஆண்டு ஜானகி சௌந்தர் இயக்கிய ’ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில் தான். அவருக்குப் பிறகு இதுவரை எந்த இயக்குநர்களாலும் இருவரையும் ஒன்றிணைத்து படம் இயக்க முடியவில்லை, எடுக்கவும் போவதில்லை என்பது உண்மை. காரணம் விஜய் அரசியலுக்குள் நுழைவதால் தளபதி 69 படத்திற்கு பிறகு அவர் சினிமாவிற்கு முழுக்கு போட உள்ளார். அதனால் விஜய் – அஜித்தே நினைத்தாலும் அவர்களால் இனி இணைந்து நடிக்க முடியாது. 

ஜானகி சௌந்தருக்கு பிறகு மற்ற இயக்குநரகளால் இருவரையும் இணைக்க முடியவில்லை என்றாலும், இருவருடனும் பணியாற்றும் வாய்ப்புகள் கிடைத்தது. அதிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய இயக்குநர்களுக்கே அந்த அரிய வாய்ப்பு கிடைத்து. 

1995 ஆம் ஆண்டு அஜித்தை வைத்து ’ஆசை’ படத்தை இயக்கிய வசந்த், 1997 ஆம் ஆண்டு விஜய் – சூர்யாவை வைத்து ’நேருக்கு நேர்’ படத்தை இயக்கினார். இரண்டு படங்களும் அஜித் மற்றும் விஜய் கேரியலில் மிக முக்கியமான படங்களாக அமைந்தன. குறிப்பாக அஜித்திற்கு சாக்லேட் பாய் இமேஜை கொண்டுவந்தது ஆசை திரைப்படம் தான். நேருக்கு நேர் படத்திலும் விஜய்யுடன் முதலில் நடிக்கவிருந்தது அஜித் தான். ஆனால், அஜித்தால் அப்போது முடியவில்லை என்பதால், சூர்யா இணைந்தார்.  

1996 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ’பூவே உனக்காக’ படத்தை எடுத்து விஜய்க்கு ஒரு soup பாய் லுக்கை கொடுத்திருந்தார் விக்ரமன். தான் காதலிக்கும் பெண் வேறொரு நபரை காதலிப்பதை அறிந்து அவர்களை ஒன்றிணைக்கும் பணியில் விஜய் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் கதை. இப்படத்தில் இடம்பெற்ற ‘மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது சோகம்கூட சுகமாகும் வாழ்க்கை இன்ப வரமாகும்’ என்ற வரிகள் வரும் ’ஆனந்தம் ஆனந்தம்’ பாடும் பாடல், பல இளைஞர்கள் வாயில் முணுமுணுக்கும் பாடலாக மாறியது  என்றே சொல்லவேண்டும். விஜய்யை தொடர்ந்து 1998 ஆம் ஆண்டு அஜித்தை கேமியோ ரோல் செய்யவைத்தார் விக்ரமன். உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் அஜித்திற்கு கேமியோ ரோல் கொடுத்திருந்தாலும், பூவே உனக்காக படத்தில் எப்படி விஜய் தன் காதலியை அவளின் காதலனுக்காக விட்டுக் கொடுப்பாரோ, அதேபோன்ற ஒரு கேரக்டரை இப்படத்தில் அஜித்திற்கு வசந்த் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

1999 ஆம் ஆண்டு ’இன்னிசை பாடி வரும் இளம் காற்று உருவமில்லை’ என்ற ஒற்றை பாடலை வைத்து விஜய்யின் கெரியரில் முக்கிய பங்கை வகித்தார் எழில். இப்படத்தில் இருந்துதான் விஜய்- சிம்ரன் ஜோடி எவர்கிரீன் கெமிஸ்ட்ரியாக மாறியது. இதன்பிறகு விஜய் – சிம்ரன் நடித்த படங்கள் ஹிட்டடித்தன. விஜய்யை வைத்து ஹிட் கொடுத்த எழிலால் அஜித்திற்கு ஹிட் கொடுக்க முடியவில்லை. 2002 ஆம் ஆண்டு எழில் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ’ராஜா’ திரைப்படம் சுமாராகவே ஓடியது. இந்தப் படத்திற்குப் பின்னர் அஜித்தும் வடிவேலும் இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

1999 ஆம் ஆண்டிலேயே விஜய்க்கு மற்றொரு ஹிட் படமாக அமைந்தது ’மின்சார கண்ணா’. இதில்வந்த அனைத்து பாடல்களும் ஹிட், அதோடு படமும் ஹிட். விஜய்யை வைத்து ஹிட் கொடுத்தாகிவிட்டது, அடுத்தது அஜித் தான் என்றிருந்த கே.எஸ்.ரவிக்குமாருக்கு அவ்வளவு எளிதில் அவரது கால்ஷீட் கிடைக்கவில்லை. 2006 ஆம் ஆண்டு தான் அஜித் – கே.எஸ்.ரவிக்குமார் இணையும் காலம் அமைந்தது. அதுவரைக்கும் அஜித்தை வேறு கோணத்தில் பார்த்துக் கொண்டிருந்த அவரது ரசிகர்களுக்கு, அவரது நடிப்பு திறமையையும் வெளியில் காட்ட வேண்டும் என்று அருமையான கதைக்களம், ட்ரிபிள் ரோல் என ’வரலாறு’ திரைப்படத்தை உருவாக்கி இருந்தார் கே.எஸ்.ரவிக்குமார். ஆனால், படம் ஓடவில்லை, இருந்தாலும் காலப்போக்கில் அஜித்தின் கல்ட் கிளாசிக் படங்கள் லிஸ்ட்டில் வரலாறும் இடம்பெற்றது. 
 
தற்போது தமிழ் சினிமாவின் நடிப்பு அரக்கனாக வலம் வரும் எஸ்.ஜே.சூர்யா, அஜித் – விஜய் இருவரையும் வைத்து மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர்களில் டாப் லிஸ்டில் இருக்கிறார். 1999 ஆம் ஆண்டு வெளியான ’வாலி’ படத்தில் அஜித்தை ஹீரோ மற்றும் வில்லனாக இரண்டு அவதாரங்களிலும் நடிக்க வைத்திருந்தார் எஸ்.ஜே.சூர்யா. சார்மிங் ஹீரோவாக வந்தாலும், சைலண்ட் வில்லனாக மிரட்டி இருப்பார் அஜித். இப்படம் மிகப்பெரிய ஹிட்டடிக்க, அடுத்த படமே விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2000 ஆம் ஆண்டு விஜய்யை வைத்து ’குஷி’ படத்தை கொடுத்த எஸ்.ஜே.சூர்யாவிற்கு பிற மொழிகளிலும் அவருக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தது. 

2001 ஆம் ஆண்டு புதுமுக இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸிற்கு வாய்ப்பளித்த அஜித்தின் நம்பிக்கைக்கு கிடைத்த பரிசுத்தான் ‘தீனா’ வெற்றி. ஒரு கேங்ஸ்டர் லுக்கில் அஜித் பயங்கர சம்பவம் செய்திருப்பார். அஜித்தை வைத்து ஹிட் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்யுடன் இணைய 11 ஆண்டுகள் தேவைப்பட்டது. 2012 ஆம் ஆண்டு விஜய்யை வைத்து ’துப்பாக்கி’ என்ற ஹிட் படத்தை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், 2014 ஆம் ஆண்டு ’கத்தி’ என்ற மற்றொரு பிளாக்பஸ்டரை கொடுத்திருந்தார். 

2005 ஆம் ஆண்டு விஜய்க்கு பிளாக்பஸ்டர் ஆண்டு என்றே சொல்லவேண்டும். அந்த ஆண்டு திருப்பாச்சி, சச்சின், சிவகாசி என மூன்று படங்களுமே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலும் குறிப்பாக ’திருப்பாச்சி’, ’சிவகாசி’ என இரண்டு வெற்றிப்படங்களையும் விஜய்க்கு கொடுத்திருந்தார் பேரரசு. இதனைத்தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு அஜித்தை வைத்து ’திருப்பதி’ படத்தை இயக்கி இருந்தாலும் அப்படம் பெரிய அளவில் ஓடவில்லை. 

எப்படி இன்று சூப்பர் ஹிட் இயக்குநராக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸிற்கு அவர் புதுமுக இயக்குநராக இருந்தபோது வாய்ப்பளித்தாரோ, அதேபோன்று ஏ.எல்.விஜய்க்கும் வாய்ப்பளித்தார் அஜித். 2007 ஆம் ஆண்டு வெளியான ’கிரீடம்’ தான் ஏ.எல்.விஜய்யின் முதல் திரைப்படம். இப்படம் வசூல் ரீதியாக வரவேற்பை பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக நன்மதிப்பை பெற்றிருந்தது. ஐந்து ஆண்டுகள் கழித்து 2013 ஆம் ஆண்டு விஜய்யை வைத்து ’தலைவா’ படத்தை இயக்கி இருந்தார் ஏ.எல்.விஜய். இப்படம் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு தொடக்கப்புள்ளி வைத்தது என்று சொன்னால் அது மிகையாது. இப்படத்தால் விஜய் சந்தித்த பிரச்னைகள் பல. அரசியல் ரீதியாக வந்த அத்தனை பிரச்னைகளையும் கடந்து வெளியான இத்திரைப்படம் சுமாராகவே ஓடியது. 

2011 ஆம் ஆண்டு அஜித் கெரியரிலேயே மிகப்பெரும் பிளாக்பஸ்டர் ஹிட் என்ற ரெக்கார்டை வைத்துள்ள திரைப்படமான ’மங்காத்தா’வை இயக்கினார் வெங்கட்பிரபு. இந்த நிலையில், தற்போது விஜய்யை வைத்து ’GOAT’ திரைப்படத்தை கொடுத்துள்ளார் அவர். மங்காத்தாவை போன்று வருமா? இல்லை அதைமீறிய படமாக வருமா என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நிலையில், அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார் வெங்கட் பிரபு. 

விஜய்யின் இறுதி படத்தை இயக்கவுள்ள ஹெச்.வினோத் மீதுதான் தற்போது எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. காரணம், அஜித்தை வைத்து ஹாட்ரிக் வெற்றி கொடுத்திருந்தார் ஹெச்.வினோத். ’நேர்கொண்ட பார்வை’, ’துணிவு’, ’வலிமை’ ஆகிய படங்களை இயக்கினார். இந்த நிலையில், அரசியலுக்கு நுழைவதற்குமுன் விஜய் நடிக்கும் கடைசி படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார் என்பதால் இப்படத்தில் நிச்சயம் விஜய் அரசியல் கருத்துகள், சமூகப் பார்வை என பல்வேறு அம்சங்கள் இருக்கும் என்ற யூகங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.  ’தளபதி 69’ திரைப்படத்திற்காக விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow