சென்னை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு இருந்தது ஆய்வில் உறுதியாகியுள்ளதாக ஆந்திர முதல்வரின் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி சில நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதாவது திருப்பதி லட்டுகள் செய்ய பயன்படுத்தும் நெய்யில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுப்பு, பன்றிக்கொழுப்பு என விலங்குகளின் கொழுப்புகள் கலக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வு முடிவு கூறியுள்ளது பக்தர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயிலின் புனிதத்தை அவமதித்தது மட்டுமின்றி, பக்தர்களின் உணர்வுகளையும் புண்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், தமிழ் திரைப்பட இயக்குநரான மோகன் ஜி (Mohan G)லட்டு விவகாரம் தொடர்பாக பல்வேறு கருத்துகளை சமூவலைத்தளத்தில் தெரிவித்து வந்தார்.
மேலும் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர் பிரபலமான கோயிலில் பயன்படுத்தப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலந்து பக்தர்களுக்கு வழங்கப்படுவதாக தான் கேள்விப்பட்டு இருந்தாக கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையே மோகன் ஜியை சென்னை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர். பழனி கோயிலில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறாக பேசியதால்தான் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து மோகன் ஜி திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது சமயபுரம் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அறநிலையத்துறை தொடர்ந்த வழக்கில் மோகன் ஜியை ஜாமினில் விடுவித்து திருச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்த நீதிபதி, ''மோகன் ஜி கைதுக்கு முகாந்திரம் உள்ளது. ஆனால் போலீசார் கைது செய்த விதம் சட்டவிரோதமானது.
மோகன் ஜியை கைது செய்ததற்கான காரணங்களை முறையாக தெரிவிக்காமல் அவரை சிறையில் அடைப்பதே காவல்துறை குறியாக உள்ளது ஏன்? வீட்டிலேயே கைது செய்து விட்டு பின்னர் திருச்சி ஆஜராக வந்த போது கைது செய்ததாக ஏன் கூறினீர்கள்’’என்று போலீசாரை கேள்விகளால் துளைத்தெடுத்தார். தொடர்ந்து பேசிய நீதிபதி, ‘’நேற்று இரவு எஃப் ஐ ஆர் தாக்கல் செய்துவிட்டு, இன்று காலை கைதுக்கான நோட்டீஸ் வழங்கி விட்டு உடனடியாக மிக அவசரமாக கைது செய்தது ஏன்?'' என்றும் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இயக்குநர் மோகன் ஜி, பழைய வண்ணாரப்பேட்டை, ருத்ர தாண்டவம், திரௌபதி, பகாசுரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.