சென்னை: சூரியின் கொட்டுக்காளி படத்துக்கு ரசிகர்களிடம் ஏன் வரவேற்பு இல்லை என்பது குறித்து இயக்குநர் அமீர் பேசியது, இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் தயாளன் என்பவர் இயக்கியுள்ள கெவி படத்தின் விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இயக்குநர் அமீர், கொட்டுக்காளி படத்தின் தோல்வி பற்றி விளக்கம் கொடுத்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கிய வாழை, சூரி நடித்த கொட்டுக்காளி என இந்த இரண்டு படங்களும் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் வாழை படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்த அளவிற்கு, சூரியின் கொட்டுக்காளிக்கு கிடைக்கவில்லை.
இதுபற்றி பேசியுள்ள இயக்குநர் அமீர், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை திரைப்படம் மெயின் ஸ்ட்ரீம்க்கு பக்கத்தில் உள்ளது. அதனால் தான் அந்தப் படம் வெற்றிப் பெற்றது. ஆனால், கொட்டுக்காளி சர்வதேச திரைப்பட விழாக்களுக்காக எடுக்கப்பட்ட ஒரு படம். அதும் மெயின் ஸ்ட்ரீம் சினிமா கிடையாது, அதேநேரம் கொட்டுக்காளி நல்ல படம் இல்லை என அர்த்தம் கிடையாது. அது முழுக்க முழுக்க Festival திரையிடலுக்காக எடுக்கப்பட்ட படமே. அப்படி பல சர்வதேச விருதுகளை வென்ற ஒரு படத்தை, இங்கே மெயின் ஸ்ட்ரீம் உடன் போட்டிப் போட வைப்பதே ஒரு வன்முறை தான்.
கொட்டுக்காளி மாதிரியான படங்களை இப்படி போட்டிப் போட வைக்கக் கூடாது. சர்வதேச அளவில் விருதுகளை வென்ற ஒரு படத்தை, அங்கு பாராட்டுகள் வாங்கிய ஒரு இயக்குநரின் படைப்பை, தியேட்டரில் சென்று பார்க்கும் ரசிகர்கள் பிடிக்கவில்லை என்றால் வரம்பு மீறுகின்றனர். சமீபத்தில் கொட்டுக்காளி பார்த்துவிட்டு தியேட்டரில் இருந்து வெளியே வந்த ஒரு ரசிகர், “இதெல்லாம் ஒரு படமா, இந்த டைரக்டர் கையில மாட்டுனா வெட்டுவேன்” என பேசுகிறார். ஒரு படம் நன்றாக இல்லையென்றால் விமர்சிக்கலாம், ஆனால் இயக்குநரை வெட்டுவேன் என ரசிகர் சொல்வதற்கு யார் உரிமை கொடுத்தது.
ஒரு படம் பார்க்க குடும்பத்துடன் தியேட்டர் செல்லும் ரசிகர்கள் 1000 ரூபாய் டிக்கெட்டுக்காக செலவு செய்கின்றனர். தனியாக பார்த்தாலே ஒருவருக்கு 150 ரூபாய் வரை டிக்கெட்டுக்கு செலவு ஆகும். அதனால் படம் நல்லா இல்லையென விமர்சித்தால் அதனை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், வெட்டுவேன், அடிப்பேன் என சொல்லும் அளவிற்கு போகக் கூடாது. ஒருவேளை கொட்டுக்காளி படத்தை நான் தயாரித்து இருந்தால், தியேட்டரில் ரிலீஸ் செய்திருக்கமாட்டேன். அது சர்வதேச விருதுகளை வென்ற பின்னர் அந்த கண்ணியத்தை கெடுத்திருக்கக் கூடாது. அந்தப் படத்தை சிவகார்த்திகேயன் ஓடிடியில் ரிலீஸ் செய்திருக்கலாம் என இயக்குநர் அமீர் பேசியுள்ளார்.
மேலும் படிக்க - தனுஷ், சிவகார்த்திகேயன் மீட்டிங் எங்க நடந்ததுன்னு தெரியுமா
முக்கியமாக மெயின் ஸ்ட்ரீம் மீடியா, சர்வதேச திரைப்பட விருது விழா என இந்த இரண்டுக்கும் இடையேயான வித்தியாசத்தை புரிந்து வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் இதுபோல நடக்கும் என கொட்டுக்காளி படத்தின் தோல்விக்கான காரணங்களை அமீர் பேசியதை ரசிகர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். விடுதலை, கருடன் படங்கள் சூரிக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தன. அதனால் கொட்டுக்காளி படத்தையும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்து லாபம் பார்த்துவிடலாம் என சிவகார்த்திகேயன் நினைத்தார். ஆனால் நமது ரசிகர்கள் இதுபோன்ற Festival மோட் படங்களை தியேட்டரில் பார்ப்பது கஷ்டம் என்பது அவருக்குத் தெரியவில்லை. கொட்டுக்காளி படம் தியேட்டரில் ரிலீஸாகி தோல்வியடைந்துள்ளது சிவகார்த்திகேயனை விட சூரிக்கு தான் பாதிப்பு எனவும், அமீர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்றும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.