சினிமா

Vettaiyan: வேட்டையன் பார்க்க ஒரே தியேட்டரில் என்ட்ரியான தனுஷ், ஐஸ்வர்யா... அனிருத் சொன்ன பஞ்ச்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் அதிக எதிர்பார்ப்புகளுடன் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்தப் படத்தின் முதல் காட்சியை பார்க்க தனுஷ், அனிருத், ஐஸ்வர்யா ஆகியோர் ரோகிணி திரையரங்கிற்கு வந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Vettaiyan: வேட்டையன் பார்க்க ஒரே தியேட்டரில் என்ட்ரியான தனுஷ், ஐஸ்வர்யா... அனிருத் சொன்ன பஞ்ச்!
வேட்டையன் படம் பார்த்த பிரபலங்கள்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – இயக்குநர் தசெ ஞானவேல் கூட்டணியில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம், இன்று உலகம் முழுவதும் ரிலீஸானது. ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் வேட்டையன் திரைப்படம் காலை 4 மணிக்கு ரிலீஸானது. ஆனால், தமிழ்நாட்டில் காலை 9 மணி சிறப்புக் காட்சிக்கு மட்டுமே அனுமதி கிடைத்தது. இதனையடுத்து இன்று காலை 9 மணிக்கு வெளியான வேட்டையன் படத்தை பார்க்க, ரசிகர்கள் ஆரவாரத்துடன் திரையரங்குகளில் குவிந்தனர். 

இயக்குநர் தசெ ஞானவேல், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் சென்னை ரோகிணி தியேட்டரில் வேட்டையன் படம் பார்க்கச் சென்றனர். அதேபோல், நடிகர் தனுஷும் ரோகிணி வேட்டையன் படம் பார்க்க ரோகிணி திரையரங்கில் என்ட்ரியானார். அதற்கு முன்பாக தனது டிவிட்டரில், ”வேட்டையன் தினம்... தலைவர் தரிசனம்” என பதிவிட்டு இருந்தார். தனுஷை தொடர்ந்து ரஜினிகாந்தின் மனைவி லதா, மகள்கள் சௌந்தர்யா, ஐஸ்வர்யா ஆகியோரும் ரோகிணி தியேட்டர் சென்றனர். முக்கியமாக தனுஷும் ஐஸ்வர்யாவும் ஒரே திரையரங்கில் வேட்டையன் படம் பார்க்கச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகரான தனுஷ், ஒருகட்டத்தில் அவருக்கே மருமகனானார். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்த தனுஷ், பின்னர் அவரை பிரிவதாக அறிவித்தார். தனுஷும் ஐஸ்வர்யாவும் ஒருசேர தங்களது விவாகரத்து குறித்து சமூக வலைத்தளங்களில் தெரிவித்தனர். அதேநேரம் இவர்களது விவாகரத்து வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் தான் உள்ளது. தங்களது மகன்களுக்காக அவர்களது பள்ளிக்கூட நிகழ்ச்சிகளில் மட்டுமே ஒன்றாக பங்கேற்று வந்தனர். இந்நிலையில், தற்போது வேட்டையன் படம் பார்க்க தனுஷும் ஐஸ்வர்யாவும் ஒரே தியேட்டருக்குச் சென்றுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் இருவரும் மீண்டும் இணைவார்களா என்றும் கேள்வி எழுந்துள்ளது. 

இதனிடையே வேட்டையன் படம் பார்க்க ரோகிணி தியேட்டர் சென்ற அனிருத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். எப்போதும் தான் இசையமைக்கும் படங்கள் ரிலீஸாகும் முன்னர், ட்வீட் போட்டு ரிசல்ட் சொல்வது அனிருத்தின் வழக்கம். இதுபற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "ட்வீட் போட்டா படம் ஹிட் ஆகணும்னு சர்ச்சை ஆச்சு.. இருந்தாலும் போட்டேன்.. குறி வச்சா இரை விழுன்னு நினைக்கிறன்.." எனத் தெரிவித்துள்ளார். அனிருத்தின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.