கடந்த 2010-ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், இலங்கை ராணுவத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், இரு சமூகத்தினரிடையே மோதலை உருவாக்கும் வகையிலும் பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர், ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டு, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு சீமான் வழக்கு தொடர்ந்திருந்தார் .
இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜோதிராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்குமார்,
இந்த வழக்கின் சாட்சி விசாரணை தொடங்கி 13 சாட்சிகளிடம் விசாரணை முடிந்துள்ளதாகவும் ,எனவே வழக்கை ரத்து செய்யக் கூடாது எனவும் வாதிட்டார்.
அப்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.சங்கர் சாட்சிகள் விசாரணை தொடங்கிவிட்டதால் வழக்கை திரும்ப பெறுவதாக தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை திரும்ப பெற அனுமதித்தனர். அதே வேளையில் வழக்கு எவ்வளவு விரைவாக விசாரித்து முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.