சினிமா

Pa Ranjith: தங்கலான் படத்தில் அந்த மாதிரி காட்சிகள்... பா ரஞ்சித் மீது பெண் வழக்கறிஞர் புகார்!

சீயான் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இயக்குநர் பா ரஞ்சித் மீது பெண் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pa Ranjith: தங்கலான் படத்தில் அந்த மாதிரி காட்சிகள்... பா ரஞ்சித் மீது பெண் வழக்கறிஞர் புகார்!
இயக்குநர் பா ரஞ்சித் மீது புகார்

சென்னை: அட்டக்கத்தி திரைப்படம் மூலம் அறிமுகமான பா ரஞ்சித், தற்போது தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநராக வலம் வருகிறார். அட்டக்கத்தியை தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இந்த வரிசையில் பா ரஞ்சித் இயக்கத்தில் சீயாம் விக்ரம் நடித்துள்ள தங்கலான், கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில், விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

கேஜிஎஃப் எனப்படும் கோலார் தங்கச் சுரங்கத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து தங்கலான் படத்தை இயக்கியுள்ளார் பா ரஞ்சித். தனது வழக்கமான பணியில் இருந்து விலகி, புதிய திரைமொழியில் தங்கலான் படத்தை எடுத்துள்ளது, பா ரஞ்சித் ரசிகர்களிடம் பெரிதாக எடுபடவில்லை. அதேபோல், தங்கலான் தமிழ் சினிமாவில் முற்றிலும் புதிய முயற்சி என சினிமா ரசிகர்கள் பாராட்டியிருந்தனர். பூர்வகுடிகளின் நில அரசியல், பொருளாதாரச் சுரண்டல், தங்கலான் படத்தின் மையக்கரு. இதனை நாகர்கள், பெளத்தம், வைணவம், அம்பேத்கரின் அரசியல், புத்தர் சிலை, தங்கத்தை பாதுகாக்க போராடும் பெண் தெய்வம் ஆகியவைகளை ஒன்றிணைத்து மேஜிக்கலான திரைமொழியில் காட்சிப்படுத்தியிருந்தார் ரஞ்சித்.

அதேபோல் மத ரீதியான வசனங்களும் இப்படத்தில் அதிகம் இடம்பெற்றிருந்தன. முக்கியமாக வைணவம் மதம் குறித்த காட்சிகளும் வசனங்களும் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தன. பசுபதியின் கெங்குபட்டார் பாத்திரம் கூட வைணவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பா ரஞ்சித் மீது பூவிருந்தமல்லி நீதிமன்ற வழக்கறிஞர் பொற்கொடி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், “புத்த மதத்தை உயர்த்துவதற்காக வைணவ மதத்தை இழிவுபடுத்தும் வகையில் தங்கலான் படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சர்ச்சையான இந்த காட்சிகளை நீக்க வேண்டும். இதுதொடர்பாக இயக்குநர் பா. ரஞ்சித் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்க - விஜய்யின் கோட் ரன்னிங் டைம், சென்சார் அப்டேட் இதோ!

மேலும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் தங்கலான் படத்தை தடைசெய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். இதனால் தங்கலான் படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து பா ரஞ்சித் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. முன்னதாக தங்கலான் படத்தின் சக்சஸ் மீட்டில் தன் மீது சிலருக்கு வன்மம் இருப்பதாக பா ரஞ்சித் ஆதங்கத்துடன் பேசியிருந்தார். மேலும் இதுபோன்ற வன்மங்களுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது எனவும் கூறியிருந்தார். 

தங்கலான் திரைப்படம் இதுவரை 70 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்தாண்டு வெளியான தமிழ்ப் படங்களில் அரண்மனை 4, மகாராஜா, ராயன் மட்டுமே 100 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளன. அந்த வரிசையில் பா ரஞ்சித்தின் தங்கலான் திரைப்படமும் இடம் பிடிக்கும் எனவும், சீக்கிரமே 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.