நாடாளுமன்றத்தில், ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு சட்டம் என்ற மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. சிறுபான்மையினரின் விவகாரங்களில் தலையீடு செய்யும் வகையிலும், சிறுபானையினருக்குச் சொந்தமான நிலங்களை அரசு கையகப்படுத்த வழி செய்யும் வகையிலும் இந்த மசோதா அமைந்திருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். வக்பு சட்டத்தில் மத்திய அரசால் முன்மொழியப்பட்ட பல திருத்தங்கள் “தொண்டு” என்ற கருத்தைக் குறைத்து மதிப்பிடச் செய்யும் முயற்சியாகவும், ஆக்கிரமிப்பாளர்களை சொத்தின் உரிமையாளர்களாக மாற்ற வழிவகுக்கும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
வக்ஃப் சட்டம் "ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு'' சட்டம் (Unified Waqf Management, Empowerment, Efficiency and Development Act) என மறுபெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பெயருக்கு ஏற்ப முன்மொழியப்பட்ட மாற்றங்கள், எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி எம்.பி. வசந்த் விஜய் மதுரைக்கு வருகை தந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “வக்பு வாரிய சட்ட திருத்தத்தை எதிர்க்கட்சி ஆகிய நாங்கள் எதிர்த்துள்ளோம். வக்பு வாரிய உறுப்பினராக யார் வேண்டுமென்றாலும் இருக்கலாம் என்று சொல்வது பாரம்பரியமாக கட்டுப்பாடோடு நடந்து வரும் ஒரு வாரியத்தின் மீது களங்கத்தை உண்டாக்கும் விஷயமாக உள்ளது. இஸ்லாமிய சமுதாயத்தை ஒதுக்குவதாக உள்ளது. வக்பு வாரியத்தில் பல லட்சம் ஏக்கர் இடங்கள் உள்ளது. அதானிக்கும், அம்பானிக்கும் இந்த இடங்களை தாரை வார்ப்பதுதான் பாஜகவின் திட்டமாக இருக்கும்” என்றார்.
மேலும் படிக்க: அதானி குழும முறைகேட்டில் 'செபி' தலைவர் மாதபிக்கும் தொடர்பு?
தொடர்ந்து பேசிய அவர், “சென்னை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்தையும் மத்திய அரசு வஞ்சிக்கிறது. தூத்துக்குடி, மதுரை ஆக இடங்களில் கன மழை பெய்த போது தேசிய பேரிடராக அறிவிக்க கேட்டதற்கு செவி சாய்க்கவில்லை, வயநாட்டில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், பல்லாயிரக்கணக்கானோர் உடமைகளை இழந்துள்ளனர். அதையும் தேசிய பேரிடராக அறிவிக்க கேட்டதற்கு செவி சாய்க்கவில்லை. பிரதமர் மோடி கேரளாவை ஆய்வு செய்துள்ளார், நிச்சயமாக அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது. சரியான நிதி கொடுத்தால்தான் அவர்களை மீட்டெடுக்க முடியும். கண்டிப்பாக பிரதமர் இதற்கு பதில் சொல்லி ஆக வேண்டும். மெட்ரோ மட்டுமல்ல எந்த திட்டமாக இருந்தாலும் தமிழகத்திற்கு அளவாகத்தான் நிதி ஒதுக்குகிறார்கள். புதிய திட்டங்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை. இது நம்மை வஞ்சிக்கும் விதமாகத்தான் உள்ளது. அதற்காகத்தான் நாடாளுமன்றத்தில் இந்திய கூட்டணி சார்பாக குரல் கொடுத்து வருகிறோம். நிச்சயம் இதற்கான பலன் கிடைக்கும். இந்த திட்டங்களை பெறுவது தமிழக எம்பிக்களின் கடமையாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.