சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் மற்றும் திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே பிஎன்ஜி ஹவுஸ் என்ற காம்ப்ளக்ஸ் முதல் தளத்தில் தேசிய வங்கி (எஸ்பிஐ) செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை வழக்கம் போல் வேலை முடிந்து வங்கி ஊழியர்கள் பூட்டி விட்டு சென்றுள்ளனர்.
இன்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்த வங்கி ஊழியர்கள் முன்பக்க பூட்டை திறந்து உள்ளே சென்று பார்த்த போது பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே ஊழியர் இது குறித்து வங்கி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் திருவல்லிக்கேணி போலீசார், மற்றும் தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாயுடன் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து வங்கி கொள்ளை முயற்சி குறித்து தகவல் அறிந்து திருவல்லிக்கேணி துணை ஆணையர் சந்தோஷ் ஹிதிமணி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் நள்ளிரவு 12 முதல் 3 மணிக்குள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் எஸ்பிஐ வங்கி மற்றும் பக்கத்தில் உள்ள மோட்டார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைக்கும் இடையே உள்ள சந்து வழியாக சென்று சுவர் ஏறி குதித்து வங்கியின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றது தெரியவந்தது.
மேலும் வங்கியில் உள்ள லாக்கரை திறக்க முடியாமல் போனதால் கொள்ளையன் வெறும் கையுடன் திரும்பி சென்றது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி நேற்று இரவு வங்கி பக்கத்தில் உள்ள ரேடியோ ஹவுஸ் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையன் அங்கு எதுவும் கிடைக்காததால் திரும்பி சென்றது தெரியவந்தது.
இது குறித்து ரேடியோ ஹவுஸ் கடையின் உரிமையாளர் வெங்கடேசன் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று அதிகாலை எஸ்பிஐ வங்கி பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. இதனால் இரண்டு சம்பவத்திலும் ஒரே நபர் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து போலீசார் சம்பவயிடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருவதுடன் இந்த கொள்ளை முயற்சி சம்பவம் தொடர்பாக வங்கி ஊழியர்கள் மற்றும் சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
எப்போதும் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில் அதுவும் காவல் நிலையம் எதிரே உள்ள வங்கியில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பொதுமக்கள் மற்றும் காவல் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.