ஓயாத குண்டு சத்தம்.. அதிகரிக்கும் பதற்றம்.. உன்னிப்பாக கவனிக்கும் இந்திய ராணுவ வீரர்கள்!
Indian Soldiers on Israel Lebanon Attack : ஐக்கிய நாடுகளின் சார்பில் அமைதி காக்கும் ராணுவ படைகள் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த அமைதி படையில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் 600 பேர் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Indian Soldiers on Israel Lebanon Attack : இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு முதல் போர் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் காசா நகரமே முற்றிலுமாக நிலைகுலைந்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 40,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டனர். மேலும் காஸா நகரில் வீடுகள், மருத்துவனைகள் என அனைத்து கட்டடங்களும் இடிந்து முற்றிலுமாக தரைமட்டமாகியுள்ளன.
இதனால் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் காஸாவில் இருந்து வெளியேறி உணவு, உடை, மருத்துவ வசதிகளின்றி பரிதவித்து வருகின்றனர். போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி காசாவில் நிவாரண முகாம்கள் மீதும், மருத்துவமனைகள் மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருவது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இஸ்ரேலின் தாக்குதலை பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேலும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் இந்த போரில் இஸ்ரேலுக்கு எதிராக உள்ளனர். அவர்கள் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆயுத உதவிகள் செய்து வருகின்றனர். மேலும் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் அவ்வப்போது தாக்குதலும் நடத்தி வந்தனர். இதற்கு இஸ்ரேல் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவம் இடையிலான மோதல் தீவிரம் அடைந்தது. ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் பேஜர்கள், வாக்கி டாக்கிகளை வெடிக்க வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் ’மொசாட்’உளவு அமைப்பு நடத்திய இந்த தொழில் நுட்ப தாக்குதலால் ஹிஸ்புல்லா அமைப்பினர் நிலைகுலைந்து போயுள்ளனர்.
இதற்கிடையே நேற்று லெபானின் தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் இஸ்ரேல் ராணுவம் மிகக் கடுமையான வான்வெளி தாக்குதல்களை நடத்தியது. லெபானில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் ஆயுத கிடங்குகள் என 300 இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 100 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இஸ்ரேல் ராணுவம்-ஹிஸ்புல்லா அமைப்பினர் இடையே தாக்குதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், லெபனானில் நிலவி வரும் சூழ்நிலையை இந்திய ராணுவ வீரர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். லெபனானுக்கும் இந்திய ராணுவத்துக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம்? இஸ்ரேல்-லெபனான் எல்லையில் இன்று; நேற்றல்ல, பல ஆண்டு காலமாக பதற்றம் நிலவி வருகிறது.
இதன் காரணமாக ஐக்கிய நாடுகளின் சார்பில் அமைதி காக்கும் ராணுவ படைகள் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த அமைதி படையில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் 600 பேர் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த அமைதி படைகளின் பணி எதிர்தாக்குதல்களை நடத்துவது அல்ல; இஸ்ரேல்-லெபனான் எல்லையில் கொந்தளிப்பான இடங்களில் அமைதியை ஏற்படுத்துவதும், பதற்றம் ஏற்படுவதை தடுப்பதுமே இவர்களின் பணியாகும்.
இரு நாடுகள் இடையே சண்டை ஏதும் நிகழாமல் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக ஐநாவின் அமைதி படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. லெபனானில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை எல்லையில் நிலைகொண்டுள்ள 600 ராணுவ வீரர்களும் உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
What's Your Reaction?