AR Rahman National Award List : நாட்டின் 70வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் திரைப்படங்கள் 6 விருதுகளை வென்றுள்ளன. அதாவது மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் 1' திரைப்படம் 4 விருதுகளையும், மித்ரன் ஆர் ஜெபகர் இயக்கத்தில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் 2 விருதுகளையும் வென்றது.
சிறந்த நடிகையாக 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்த நித்யா மேனன் தேர்வாகியுள்ளார். சிறந்த நடன இயக்குனராக இந்த படத்துக்காக ஜானி மாஸ்டர், சதீஷ் தேர்வாகியுள்ளனர். இதேபோல் தமிழில் சிறந்த திரைப்படமாக 'பொன்னியின் செல்வன் 1' தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்துக்காக சிறந்த ஒலி வடிவமைப்பு விருதை ஆனந்த் கிருஷ்ணமூர்த்தியும், சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை ரவிவர்மனும் வென்றுள்ளனர்.
இது தவிர 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான், 'பொன்னியின் செல்வன் 1' திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதை வென்றுள்ளார். 'பொன்னியின் செல்வன் 1' திரைப்படம் மிக பிரம்மாண்டமான வெற்றி பெற ஏ.ஆர்.ரஹ்மானும் முக்கிய காரணம். தனது தரமான பின்னணி இசையால் நம்மை கடந்த காலத்துக்கு அழைத்து சென்றிருப்பார் இசைப்புயல்.
இந்தியாவின் முன்னணி இசை கலைஞரான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருதுகள் பெறுவது என்பது அல்வா சாப்பிடுவது மாதிரி. இது அவர் பெறும் 7வது தேசிய விருது ஆகும். இதற்கு முன்பாக 6 தேசிய விருதுகளை ஏ.ஆர்.ரஹ்மான் வென்றுள்ளார்.
அதாவது கடந்த 1999ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ரோஜா' திரைப்படத்தில் இசை அமைத்தற்காக தனது முதல் தேசிய விருதை ஏ.ஆர்.ரஹ்மான் வென்றார். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது. அதன்பின்பு கடந்த 1996ம் ஆண்டு 'மின்சார கனவு' திரைப்படத்தில் இசையமைத்ததற்காக 2வது தேசிய விருது வென்றார்.
பின்பு 2001ம் ஆனது 'லகான்' என்னும் இந்தி திரைப்படத்திற்கும், 2002ம் ஆண்டு தமிழில் வெளியான 'கன்னத்தில் முத்தமிட்டால்' திரைப்படத்திற்கும், 2017ம் ஆண்டு 'காற்று வெளியிடை' திரைப்படத்திற்கும் சிறந்த இசையமைப்பாளர் விருதை பெற்றார். கடைசியாக 2027ம் ஆண்டு வெளியான 'மாம்' என்னும் இந்தி திரைப்படத்திற்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதினை ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றிருந்தார்.
மேலும் ஆஸ்கர் நாயகனான இவர் கடந்த 2009ம் ஆண்டு 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று உலகம் முழுவதையும் திரும்பி பார்க்க வைத்திருந்தார். மேலும் ஒரு கோல்டன் குளோப் விருது, இரண்டு கிராமிய விருதுகள், 6 தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார். இது மட்டுமின்றி 15 பிலிம்பேர் விருதுளையும், 7 பிலிம்பேர் சவுத் விருதுகளையும் ஏ.ஆர்.ரஹ்மான் அள்ளியுள்ளார்.
மேலும் கடந்த 2010ம் ஆண்டு இந்தியாவின் 3வது உயரிய விருதான 'பத்ம பூஷண்' விருதையும் 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் வென்றுள்ளார். தமிழ் திரையுலகில் 'இசைஞானி' இளையராஜா அளவுக்கு போற்றப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் இன்றும் தனது இசையால் மக்களின் மனதை வருடி வருகிறார். அண்மையில் கூட தனுஷ் நடிப்பில் வெளியான 'ராயன்' படத்தில் இவரின் இசையமைப்பு பெரிதாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.