கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை இன்று(அக்.,16) திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய். ஏழு தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தின் கட்டுமானப் பணிகள், கடந்த 2024-ம் ஆண்டு திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டன.
சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த விஜய், விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்கு சாலை மார்க்கமாகச் சென்றார். வழியெங்கும் தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்த நிலையில், சில இடங்களில் ரோடு ஷோவும் மேற்கொண்டார்.
அறிவுலகத்தைத் திறந்து வைத்ததுடன், அங்குள்ள பெரியார் சிலை மற்றும் கல்வெட்டையும் திறந்து வைத்து, மையத்தில் இடம்பெற்றுள்ள வசதிகளைப் பார்வையிட்டார். பின்னர் நடைபெற்ற அரசு விழாவில் வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இதற்குப் பிறகு விஜய் கேரள மாநிலம் திருச்சூருக்குச் செல்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக ஹெலிகாப்டர் தயாராக இருந்த நிலையில், கோவையில் பெய்து வரும் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாகப் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் கேரளப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பிற்பகல் 3.30 மணியளவில் சிறப்பு விமானம் மூலம் கோவையில் இருந்து சென்னை திரும்ப விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.