தமிழ்நாடு

குடை ரெடியா ? மழை கொட்டப்போகுது ! பல மாவட்டங்களுக்கு முக்கிய எச்சரிக்கை !

By Santhosh
08 Oct 2026, 07:00 AM
தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ள நிலையில், கோவை மற்றும் நீலகிரி மலைப்பகுதிகளில் கனமழையும், 20 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று (அக்.8) பல மாவட்டங்களில் மழை பெய்யும் சூழல் நிலவுகிறது. குறிப்பாக கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழைக்கு காரணம் என்ன ?

மன்னார் வளைகுடா முதல் வடக்கு உள் கர்நாடகா வரையிலான பகுதியில், உள் தமிழகம் மற்றும் தெற்கு உள் கர்நாடகா வழியாக சுமார் 0.9 கி.மீ உயரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் வளிமண்டல நிலை மழைக்கு சாதகமாகியுள்ளது.

கோவை, நீலகிரியில் கனமழை

இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மழையின்போது இடியுடன் கூடிய மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மலைப்பகுதிகளில் வசிப்பவர்களும், பயணம் மேற்கொள்பவர்களும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

இந்த மாவட்டங்களில் மிதமான மழை

தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய 20 மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

இப்பகுதிகளில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்றும் வீச வாய்ப்புள்ளது.

புதுச்சேரி, காரைக்காலிலும் மழை

தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். புதுச்சேரியிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. காரைக்கால் பகுதியில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னைக்கு மழை வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்பநிலை எப்படி?

வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று சில இடங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கலாம். தென் தமிழ்நாட்டில் வெப்பநிலை இயல்பான அளவை ஒட்டியே காணப்படும்.

இதனால் இன்று ஒருபுறம் வெப்பநிலை நீடித்தாலும், மறுபுறம் மாலை மற்றும் இரவு நேரங்களில் ஆங்காங்கே மழை பெய்யும் சூழல் உருவாகியுள்ளது.