தமிழ்நாடு

மதுரை–தேனி ரயில் சேவை குறித்து மக்கள் கொந்தளிப்பு: “எங்களுக்கு பயனில்லை” எனக் குற்றச்சாட்டு

By Sumalekha
28 Jun 2026, 10:00 PM
மதுரை–தேனி பயணிகள் ரயில் ஒரே பயணமாக இயக்கப்பட்டு பகல் முழுவதும் தேனியில் நிறுத்தப்படுவதால், இரு மார்க்க பயணிகளுக்கும் பயனில்லை என மக்கள் குற்றம்சாட்டி, காலை–மாலை இரு திசைகளிலும் சேவை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையிலிருந்து தேனி வரும் பயணிகள் ரயில், பகல் முழுவதும் இங்கேயே தூங்குகிறது, மாலையில் கிளம்பிவிடுகிறது. இந்த ரயிலால் எங்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை' என்று ஆவேசமாக முழங்குகிறார்கள் தேனி மாவட்ட மக்கள்.

1928ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் போடி, தேனி வழியாக மதுரை வரை மீட்டர் கேஜ் ரயில் துவங்கப்பட்டது. ஏலக்காய், மிளகு கிராம்பு போன்ற வாசனைப் பொருட்களை உலகம் முழுவதும் கொண்டுசெல்ல இது பெரிதும் பயன்பட்டது. பிறகு அதை அகல ரயில் பாதையாக மாற்ற 2010ல் மீட்டர் கேஜ் ரயில் சேவை நிறுத்தப்பட்டு தண்டவாளங்கள் நீக்கப்பட்டன. ஆனால் அகல ரயில் பாதைக்கான வேலை 2014வரை ஆமை வேகத்தில் நடைபெற்றது. பல போராட்டங்களுக்குப் பிறகு 2022 மே 26ல் மதுரை தேனி பயணிகள் ரயில் சேவை துவங்கப்பட்டது.

12 ஆண்டுகளுக்குப் பிறகு அதை ஆவலோடு கொண்டாடினார்கள் மக்கள். ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்டநாள் நீடிக்கவில்லை. கடந்த நான்காண்டுகளாக மதுரையிலிருந்து காலையில் வரும் ரயில், பகல் முழுவதும் இங்கேயே காத்துக்கிடந்து, மாலையில் வந்தவர்களை ஏற்றிக்கொண்டு கிளம்பிவிடுகிறது. இந்த ரயில் சேவை தங்களது தேவையை பூர்த்தி செய்யாமல் மதுரையிலிருந்து வேலை விஷயமாக வந்து செல்வோருக்கு மட்டுமே பயனளித்துக்கொண்டிருக்கிறது என கொந்தளிக்கிறார்கள் தேனி மாவட்ட மக்கள்.

இதுகுறித்துப் பேசிய சமூக ஆர்வலர் ராமகிருஷ்ணன், "போடி -மதுரை இடையேயான ரயில் சேவை என்பது பாரம்பரியமானது. வெள்ளைக்காரன் போட்ட இந்த ரயில் பாதையை அகலப்பாதையாக மாற்ற 2010 டிசம்பரில் அதன் சேவை நிறுத்தப்பட்டது. ஆனால், பணிகள் வேகமாக நடக்கவில்லை. அரசியல் காரணங்களால், மாநில அரசு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தவில்லை என பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது.

மக்கள் தீவிரப் போராட்டம் நடத்திய பிறகே கோடி ரூபாய் மதிப்பில் பணி நிறைவடைந்தது. கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு இந்த மதுரை தேனி பயணிகள் ரயில் சேவை துவக்கப்பட்டது. அந்த ரயில் காலை 8:20க்கு மதுரையிலிருந்து கிளம்பி 9:35க்கு தேனி வந்து சேரும். அப்படியே தேனியில் பகல் முழுவதும் நின்றுவிட்டு மாலை 6.15க்கு மதுரை கிளம்பி 750க்கு போய்ச்சேரும். இதுதான் கடந்த நான்காண்டுகளாக நடக்கும் கூத்து. மதுரையிலிருந்து அரசு அலுவலர்கள் தேனிக்கு கூட்டமாக வந்து பணி முடித்து அவர்களை மாலை அழைத்துச் செல்லவே இந்த ரயில் பயன்படுகிறது. இதற்கான சீசன் டிக்கெட் மாதம் 250 ரூபாய்தான்.

தேனி சட்டக்கல்லூரி, மருத்துவக்கல்லூரி, கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் இதில் அதிகம் வருகின்றனர். கூடவே அரசு அலுவலர்களும் வந்துபோகிறார்கள். அதேநேரம் தேனியிலிருந்து மதுரைக்கு அரசு அலுவலர்கள், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உட்பட கல்லூரிகளுக்கு மாணவர்கள் அதிக செலவு செய்து கூட்ட நெரிசலில் பஸ்சில் சென்றுகொண்டிருக்கிறார்களே பல அப்படிப்பட்ட பல ஆயிரக்கணக் கானவர்களுக்கு இந்த ரயில் பயன்படவில்லை என்றால் தேனி மாவட்ட மக்கள் இளித்தவாயர்களா?" என்றார் கோபமாக ஆசே முன்னாள் ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினரான பொன்காட்சி கண்ணன், "நான் ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினராக இருக்கும்போதே, மதுரை தேனி போடி ரயிலை காலை, மதியம், மாலை என மூன்று முறை இரு மார்க்கமாகவும் இயக்க வேண்டும் என்றுதான் தொடர்ந்து வலியுறுத்தினேன். மீட்டர் கேஜ்ஜாக இருக்கும்போதே இரு மார்க்கமாகவும் காலை மாலை வந்தது. தற்போது அதுவும் இல்லை. இது மதுரை அரசு அதிகாரிகளுக்காக இயக்கப்படும் ரயில் என்றுதான் சொல்ல வேண்டும்.

தேனியிலிருந்து மதுரைக்கு பஸ்சில் சென்றால் இரண்டு மணி நேரம் ஆகும். பணமும் அதிகம் அகல ரயில் பாதையில் ஒன்றேகால் மணி நேரத்தில் மதுரை சென்றுவிட முடிகிறது. தேனி-மதுரை சாலை மார்க்கத்தில் ராமகிருஷ்ணன் கடந்த 5 ஆண்டுகளை எடுத்துக்கொண்டால், தனியார் பஸ்ஸின் அதிவேகத்தால் ஏராளமான விபத்துகள் நடந்து எத்தனையோ உயிர்கள் பறிபோயுள்ளன. எனவே தெற்கு ரயில்வே, மெத்தனத்தை கைவிட்டு தேனி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் காலையில் போடிதேனி வழியாக மதுரைக்கு சேவையை துவங்க வேண்டும். அதேபோல மாலையில் மதுரையிலிருந்து தேனிக்கு சேவையை துவங்க வேண்டும்" என்றார்.

திண்டுக்கல் சபரிமலை போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரும், தேனி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவருமான சங்கரநாரயணன், 'மதுரைக்கு காலையில் வேலைக்குச் செல்வோரும், படிக்கச் செல்லும் மாணவர்களும் மாலையில் தேனி திரும்பும் வகையில் எதிர்ப்பக்கமும் ரயில் விட வேண்டும். இதுகுறித்து தேனி மாவட்ட ரயில்வே பயணிகள் சங்கத்தின் சார்பில் அதிகாரிகளுக்கு மனு கொடுத்திருக்கிறோம்.

இதற்காக சமீபத்தில் மதுரையில் ஆர்ப்பாட்டமும் நடத்தினோம்.காலை நேரத்தில் தேனியிலிருந்து மதுரைக்கு ரயில் இயக்கினால் கூட்டம் நிறையும் நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. தேனி மாவட்ட மக்கள் தொழில், வியாபாரம், வேலைநிமித்தம் என மதுரைக்கு நாள்தோறும் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. அவர்களின் கஷ்டத்தையும் புரிந்துவைத்திருக்கும் ரயில்வே நிர்வாகம், கோரிக்கையை நிறைவேற்றாமல் அலைகழிப்பது எந்தவிதத்தில் நியாயம்?" என்றார்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளோ, தேனியிலிருந்து மதுரைக்கு காலை, அங்கிருந்து மாலை ரயில்விட புரோபசல் இருக்கு படிப்படியாக செயல்படுத்தப்படும்" என்றனர்.

அதான் எப்போன்னு கேக்குறாங்க ஆபிசர்ஸ்?