நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், அவற்றை தடுக்க தற்போதைய அரசு செயல்பட்டு வருவதாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
NEET தேர்வு மற்றும் EWS இடஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி, திராவிடர் கழகம் சார்பில் இன்று சென்னை வேப்பேரியில் இருசக்கர வாகனப் பரப்புரைப் பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. வேப்பேரி பெரியார் திடலில் இருந்து பேரணி தொடங்கும் என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து, பெரியார் திடல் வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதன் காரணமாக, திட்டமிடப்பட்டிருந்த இருசக்கர வாகனப் பரப்புரைப் பேரணியை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக திராவிடர் கழகம் அறிவித்தது. மேலும், கடந்த 18-ம் தேதியே அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்த போதிலும், இறுதி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "NEET தேர்வு மற்றும் EWS இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தைக் கண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசைவிட த.வெ.க. அரசே அதிகம் அஞ்சுகிறது. தந்தை பெரியாரை கொள்கைத் தலைவராக சொந்தம் கொண்டாடும் த.வெ.க. அரசு, பெரியார் திடலிலேயே ஏன் போலீசாரைக் குவித்தது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், "திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்துக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதன் காரணம் என்ன? யாருடைய அழுத்தத்திற்கு பணிந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது? கடந்த காலங்களில் இதேபோன்ற போராட்டங்களை திராவிடர் கழகம் அமைதியான முறையிலும், அறவழியிலும், கட்டுப்பாட்டுடனும் நடத்தி வந்துள்ளது. அத்தகைய இயக்கத்தின் பரப்புரைப் பயணத்தை தடை செய்வது கடும் கண்டனத்திற்குரியது.
சிவப்பும், மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவி என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. அடக்குமுறை அரசியலை கைவிட்டு, கி. வீரமணி தலைமையிலான பரப்புரைப் பயணத்துக்கு உடனடியாக உரிய அனுமதியை த.வெ.க. அரசு வழங்க வேண்டும்" என்றும் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.